சோனியா மருமகன் வழக்கு; விசாரிக்கும் அதிகாரி மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சோனியா மருமகன் வழக்கு; விசாரிக்கும் அதிகாரி மாற்றம்

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (11)

புதுடில்லி: சோனியா மருமகன் ராபர்ட் வாத்ராவின் வழக்கை விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா, பிரிட்டன் தலைநகர் லண்டனில், சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி விற்றுள்ளார். 'ரியல் எஸ்டேட்' எனப்படும், வீடு, மனைகளை வாங்கி விற்பதை பெரிய அளவில் தொழிலாக செய்யும் அவர், லண்டன் விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, மத்திய அரசின் அமலாக்க இயக்குனரகம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கினை அமலாக்கத்துறை சார்பாக விசாரணை செய்து வரும் ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் சர்மா, திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், இந்திய வருவாய் துறை பிரிவு அதிகாரி மகேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.





துணை இயக்குனராக பணியில் சேர்ந்த ராஜிவ் சர்மாவுக்கு, இணை இயக்குனராக பணி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவருக்கு நீண்ட காலமாக பணி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து சொந்த பணி பிரிவான போலீசில் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்ததையடுத்து அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X