கூட்டுறவு சங்கங்களில் வேலை காலி பணியிட விபரம் கேட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் வேலை காலி பணியிட விபரம் கேட்பு

Added : ஜூன் 05, 2019

கூட்டுறவு சங்கங்களில், புதிதாக ஊழியர்களை நியமிக்க, காலி பணியிடங்களின் விபரங்களை வழங்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.நடவடிக்கைகூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்ற வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இவற்றில், பல ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.

அவற்றை நிரப்ப, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு நிறுவனங்களில், காலி பணியிடங்களின் விபரங்களை வழங்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.சுற்றறிக்கைஇது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கூட்டுறவு நிறுவனங்களில், 2019 ஜூன், 1 நிலவரப்படி உள்ள, அனைத்து காலி பணியிடங்களின் விபரங்களை, விடுதலின்றி சரிபார்த்து, இணை பதிவாளர்கள், கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்.

பணியிடம் தொடர்பாக, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பதவிகளை, காலி பணியிடங்கள் விபரங்களில் சேர்க்கக் கூடாது. நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள், அங்கீகரிக்கப்பட்ட பணிநிலை திறனில் இல்லாவிட்டால், அவற்றை காலி பணியிடங்களாக குறிப்பிடக் கூடாது.தொழில்நுட்ப பணியாளர்களில், அடிப்படை ஊதியம் குறைவாக உள்ள பணிகள், இளநிலை உதவியாளருக்கு கீழ் எனவும்; அடிப்படை ஊதியம் அதிகமாக உள்ள பணிகள், இளநிலை உதவியாளருக்கு மேல் எனவும், குறிப்பிட வேண்டும். இந்த காலி பணியிட விபரங்களை, இம்மாதம், 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X