சுரு : ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற ஊர் தான், இப்போதைக்கு உலகில் அதிக வெப்பமுள்ள நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இரவு நேரங்களில் கூட அனலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

மிக அதிகபட்சமாக சுருவில் ஜூன் 1 ம் தேதியன்று 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், ஜூன் 3 ம் தேதி 50.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாக 50 டிகிரியை ஒட்டியே வெப்பம் காணப்படுகிறது. உச்சபட்ச வெப்பம் காரணமாக இப்பகுதியில் உள்ள மக்கள் வழக்கமான வேலைகள், உணவு பழக்கங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு கூட 35 டிகிரி செல்சியசை ஒட்டி வெப்பநிலை இருப்பதாகவும், அந்த சமயத்திலேயே மின் தடை ஏற்பட துவங்குவதாகவும் சுரு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தினசரி மளிகை பொருட்களுடன் குறைந்தது 10 கிலோ ஐஸ் கட்டிகளையும் வாங்கி வந்து தங்களின் தண்ணீர் தொட்டிகள் மற்றும் ஏர் கூலர்களில் போட்டு, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருவதாக சிலர் கூறுகின்றனர்.

அதிக வெப்பம் காரணமாக வாந்தி, வயிற்றுபோக்கு, தோல் ஒவ்வாமை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு டாக்டர்கள் அனைவரின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டு, உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான பாதிப்புக்களால் மட்டும் இதுவரை சுமார் 70 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுரு பகுதி மக்கள், தங்களின் உணவாக மோர், பச்சை வெங்காயம், தயிர், சப்பாத்தி போன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். வெயில் துவுங்குவதற்கு முன்பே காலை உணவை முடித்துக் கொள்கின்றனர். பகல் வேலையில் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
காலை 10.30 மணிக்கு மேல் வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்ப்பதால், சாலைகள், ரயில் நிலையங்கள் போன்றவை வெறிச்சோடி காணப்படுகின்றன. நேற்று (ஜூன் 05) வெப்பநிலை 47.3 டிகிரி செல்சியசாக இருந்த நிலையில், பல பகுதிகளில் பறவைகள் மரங்களில் இருந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE