சென்னை : 'நீட் தேர்வை, தாமதமின்றி, ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: 'நீட்' தேர்வு, சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என, அந்த தேர்வின் முடிவுகள் நிரூபிக்கின்றன. பிற மாநிலங்களை விட, அதிக அளவில், அரசு மருத்துவ கல்லுாரிகளை கொண்டது, தமிழகம். தி.மு.க., ஆட்சியில், மாவட்டம்தோறும் மருத்துவ கல்லுாரி என்ற, தொலைநோக்குடன் திட்டமிடப்பட்டு, இது செயல்படுத்தப்பட்டது. அவற்றின் விளைவாக, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,350 இடங்கள் உள்ளன.
அரசு பள்ளியில் படித்து, அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்தோரின் எண்ணிக்கை, சராசரியாக, நுாற்றுக்கு, 25 என்ற அளவில் இருந்தது. நீட் தேர்வுக்குப் பின், அந்த எண்ணிக்கை, வெறும், ஐந்துக்கும் கீழ் போய் விட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம்பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை, 50க்கு மேல் இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு பின், மூன்று என்ற அளவில் குறைந்து விட்டது.
தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், ஆண்டுதோறும், 2,000க்கும் அதிகமான மருத்துவ இடங்களை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் பெற்று வந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கையும், நீட் தேர்வுக்கு பின், நுாறில் ஒரு பங்காக குறைந்து விட்டது. மருத்துவ கனவை சீரழிக்கும், நீட் தேர்வை தாமதமின்றி, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.