லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்து, 10 நாட்களாகியும், தோல்வியில் இருந்து எதிர்க்கட்சிகள் இன்னும் மீளவில்லை. ராகுல், காங்., தலைவர் பதவியில் தொடருவாரா என்ற கேள்விக்கு உறுதியான பதில் இல்லை. பல்வேறு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தலையெடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீபத்தில், லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தது. இதில் தேர்தல் நடந்த, 542 தொகுதிகளில், பா.ஜ., 303 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 இடங்களில் வென்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்துள்ளது. அதே நேரத்தில் காங்., 52 தொகுதிகளிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 91 இடங்களில் மட்டுமே வென்றன. மற்ற கட்சிகள், 98 இடங்களில் வென்றன. இந்தத் தேர்தல் முடிவுகள், எதிர்க்கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திரண்டன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி அமைவதில், தங்களுக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்ற எண்ணத்தில், இந்தக் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. காங்.,கில் கும்மிருட்டு இந்தத் தேர்தல் முடிவுகள், காங்., கட்சிக்கு பெருத்த அடியாகும். பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது; அப்போது அதிக தொகுதிகளில் வென்றால், மற்ற கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என, காங்., நினைத்தது. ஆனால், காங்., 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
இதைத் தவிர, குடும்பத்தின் சொத்தாக கருதப்படும், உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், காங்., தலைவர் ராகுல் தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக, ராகுல் முன்வந்தார். அதை ஏற்க, கட்சியின் உயர்நிலைக் குழுவான, காங்., செயற்குழு மறுத்தது. ஆனால், ராகுல் தன் முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த, சில நாட்களாக, அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், டில்லியில் உள்ள, காங்., தலைமையகம் வெறிச்சோடி கிடக்கிறது. பெரும் பாலான மூத்த தலைவர்கள், கட்சி
அலுவலகத்துக்கு வருவதில்லை. வரும் ஒரு சிலரும், யாரும் இல்லாமல், அலுவலகம்
கும்மிருட்டாக இருப்பதால், சிறிது நேரத்தில் கிளம்பி விடுகின்றனர். கட்சியின் பல மாநில தலைமை அலுவலகங்களின் நிலைமையும் இது தான். இதற்கிடையே, கட்சியில் கோஷ்டி மோதலும், தங்களுடைய மாநிலத்தில் தோல்விக்கு காரணம் என, மற்றவர்களை சுட்டிக் காட்டும் நிகழ்வுகளும், வழக்கம்போல் நடந்து வருகின்றன.
கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,
சத்தீஸ்கரில், பா.ஜ.,விடமிருந்து ஆட்சியை, காங்., கைப்பற்றியது. ஆனால், தற்போது நடந்த லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில், காங்.,குக்கு பலத்த அடி விழுந்தது. அதையடுத்து, தோல்விக்கு யார் காரணம் என்ற கண்டுபிடிப்பில், காங்., மூத்தவர்கள் இறங்கி உள்ளனர்.
நடவடிக்கை
குறிப்பாக ராஜஸ்தானில், மாநிலத் தலைவர் சச்சின் பைலட் மீது, முதல்வர், அசோக் கெலாட் குற்றஞ்சாட்டி வருகிறார். மத்திய பிரதேசத்திலும், இதுபோன்ற காட்சிகள் அரங்கேறியுள்ளன. வழக்கமாக, ரம்ஜான் நோன்பு சமயத்தில், காங்கிரஸ் சார்பில், 'இப்தார்' விருந்து அளிக்கப்படும். ஆனால், இம்முறை, அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அடுத்த ஓராண்டுக்குள், ஹரியானா, ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர், டில்லி, பீஹார் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஹரியானா, ஜார்க்கண்ட், மஹாராஷ்டிராவில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும், லோக்சபா தேர்தல் தோல்வியின் விரக்தியிலேயே, இன்னும் உள்ளன. குறிப்பாக, காங்., கட்சியில், ராகுல் தலைவராக தொடருவாரா என்ற பட்டிமன்றம் நடந்து வருகிறது. உ.பி., மாநிலத்தில், லோக்சபா தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் அமைத்த கூட்டணி முறிந்தே போனது.
இதனால், அடுத்து நடைபெற உள்ள, சட்டசபை தேர்தல்களுக்குள் எதிர்க்கட்சிகள் தலையெடுத்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், வரும், 17ல், பார்லிமென்ட் கூட உள்ளது. அப்போது, எதிர்க் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் துவங்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பல்வேறு மாநில சட்டசபைகளுக்கு, அடுத்தடுத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அவற்றை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தர பிரதேசத்தில், லோக்சபா தேர்தலின்போது அமைத்த கூட்டணியை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் முறித்து கொண்டுள்ளன. அங்கு விரைவில் நடக்க உள்ள, 11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளன. அதனால், காங்.,கும் இங்கு தனித்து போட்டியிடும் நிலை உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம், காங்., கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் பெரும் தோல்வியை சந்தித்தன. மாநிலத்தில், மொத்தமுள்ள, 28 தொகுதிகளில், பா.ஜ., 25ல் வென்றது. காங்.,மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம், தலா, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றன. அதைத் தொடர்ந்து தோல்விக்கு பரஸ்பரம் காரணம் கூறி வருகின்றன. அதனால், இந்தக் கூட்டணி எவ்வளவு நாளுக்கு நிலைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ள மேற்கு வங்கத்திலும், பா.ஜ., வலிமை அடைந்துள்ளது. திரிணமுல்லைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், காங்.,கிலிருந்து விலகியுள்ளார். அவர், பா.ஜ.,வில் இணைவார் எனக் கூறப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், லோக்சபா தேர்தலின்போது, காங்.,குடன் அமைத்த கூட்டணியை, தேசிய மாநாட்டு கட்சி முறித்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வரத் துவங்கியுள்ளன. இவ்வாறு எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு, துண்டுத் துண்டாக உள்ளன. இது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துள்ளது என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (12)
Reply
Reply
Reply