கடந்த, 1965-ல், வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாமல், தமிழகத்தில் மட்டும், ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகின. அதனுடன், அப்போது நிலவிய, கடும் அரிசி பஞ்சமும், சேர்ந்து கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி துாக்கி எறியப்பட்டு, 1967ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு, இது வரை, தமிழகத்தில், காங்கிரசால், ஆட்சிக்கு வர முடியவில்லை.
ஹிந்தி எதிர்ப்பு என்ற போதையில் மூழ்கிய, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களில், அப்போது, 18 வயதுடைய நானும் ஒருவன். மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள நான், 72 வயதில் சிந்தித்து பார்க்கிறேன்... அப்போது செய்தது, தவறு என உணர்கிறேன்.தாய் மொழியுடன், கூடுதலாக ஒன்றிரண்டு மொழிகளை படிப்பதில்-, அறிந்து கொள்வதில், எந்த தவறும் இல்லை. ஹிந்தியை கற்காமல் விட்டது, இப்போதும் எனக்கு பெரும் மனக்குறையாக இருக்கிறது. நான் தமிழன் தான்; தமிழ் மொழி மீது உயிரையே வைத்துள்ளேன். எனினும், தமிழ் மட்டுமே போதாது என்பது என் வாதம்!அந்த காலத்தில், அலங்கார தமிழ் வசனங்கள் பேசியவர்களை நம்பி, ஹிந்தியை, தமிழகத்திலிருந்து விரட்டியதால், எண்ணற்ற இளைஞர்கள் வேலையின்றி திண்டாடினர். அடுத்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் உணவு பஞ்சம் வந்த போது, பக்கத்து மாநிலங்களுக்கு கூட, செல்ல முடியாமல், இங்கேயே பட்டினி கிடந்து இறந்தோர் பலர்.
பிழைப்பதற்காக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு சென்ற பலர், ஹிந்தி, மராத்தி மொழிகள் தெரியாததால், கூலி வேலை மட்டுமே பார்த்து, காலத்தை ஓட்டினர். என்னைப் போன்ற சிலர், நன்றாக படித்ததால், கிடைத்த வேலைகளில் அமர்ந்து விட்டனர்.எனினும், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிய கதை தான். தமிழகம் தவிர்த்து, அடுத்த மாநிலம் சென்றால், கை சைகை தான் மொழியாக இப்போதும் இருக்கிறது.ஹிந்தியை வெறுத்து, ஒதுக்க வலியுறுத்திய அரசியல்வாதிகளின் வாரிசுகள், உறவினர்கள், அந்த மொழியை பேசவும், எழுதவும் படித்து விட்டனர். அதனால் அவர்கள், பல மாநிலங்களில், தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி விட்டனர்.ஆனால், என்னைப் போன்ற சாமானியர்கள், ஹிந்தி இல்லாத, தமிழில் மட்டுமே போதித்த, அரசு பள்ளிகளில் தான் படித்தோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது.ஆங்கிலம் என்றாலே கசக்கும் வகையில் தான், அப்போதைய மனநிலை இருந்தது. இதனால், அரைகுறை ஆங்கிலமும், அதே அளவில் தமிழும் கற்று, இந்த இரண்டு மொழிகளிலும், நிபுணத்துவம் பெற முடியாமல் போனோம்.
அப்போது, ஹிந்தி வேண்டாம் என்றோர், அதன் பிறகு, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், தமிழை வளர்க்க பாடுபடவில்லை. ஆங்கிலத்தை தான், முழுமையாக அறிந்து கொள்ளவும் செய்யவில்லை.
தமிழர் என்றால், ஹிந்திக்கு எதிரானவர்கள் என்ற மனநிலையை, நாட்டின் பிற மாநிலங்களில் விதைத்தனர். அது தான், அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!அந்த காலகட்டத்தில், தனியார் பள்ளிகள், அத்தி பூத்தாற்போலத் தான் இருந்தன. அரசு பள்ளிகளில் தான், அனைத்து தரப்பினரும் படித்தனர்.அரசு பள்ளிகளில், ஹிந்தி அல்லது வேறு மொழிகள் கற்றுக் கொடுக்கப்படாததால், அடுத்த சில ஆண்டுகளில், படித்து முடித்த பலருக்கு, மத்திய அரசு பணிகள் கிடைக்கவில்லை; பிற மாநிலங்களுக்கு, வேலைக்கு செல்ல முடியவில்லை.அப்போது துவங்கிய வேலையில்லாத் திண்டாட்டம், 20 - 30 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் நீடித்தது. வேலை தேடி, வடக்கே சென்ற நம் இளைஞர்கள், மொழிப் பிரச்னையால், மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக, கம்ப்யூட்டர் வந்தது. அதன் மொழிகளை கற்றோர், கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்து, வேலையில்லாத் திண்டாட்டத்தை, சற்று குறைத்தனர். உலகம் உருண்டை என்பது போல, இப்போது மீண்டும், வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகியுள்ளது. கம்ப்யூட்டர் கற்ற பலருக்கு, வேலையில்லை.
இந்நிலையில், ஹிந்தி போன்ற பிற மொழிகளும் நம் இளைஞர்களுக்கு தெரியாததால், தமிழகம் தாண்டி, வேறு மாநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை.இதை இன்னும் உணராத அரசியல் கட்சிகள், மீண்டும், ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்து, நம் இளைஞர்களுக்கு, பாலைவனத்தை பாதையாக காட்டி வருகின்றன. 'ஹிந்தி வேண்டாம்' என சொல்லும் அரசியல் கட்சிகள், தமிழையாவது சரியாக கற்றுக் கொடுக்க முன் வரவில்லை.
எந்த அரசியல் கட்சியாவது, தமிழை கற்றுக் கொடுக்க, மையங்கள் துவக்கியுள்ளனவா என்றால், இல்லை. அதன் தலைவர்கள் தான், சரியாக தமிழ் பேசுகின்றனரா... அதுவும் இல்லை! இப்போதைய இளைஞர்களில், 95 சதவீதம் பேருக்கு, ஒரு பக்கம் கூட, தமிழில் சுத்தமாக எழுதத் தெரியாது என்பது தான் வேதனையான உண்மை. அந்த அளவுக்கு தான், நம்மவர்களுக்கு, தாய் மொழியின் மீது பிடிமானம் உள்ளது.
சரி... தமிழ் தான் எழுதத் தெரியவில்லை... ஆங்கிலத்திலாவது புலமை பெற்றுள்ளனரா... அதுவும் இல்லை. எல்.கே.ஜி., முதல், கல்லுாரி வரை, ஆங்கிலத்தில் தான் படித்துள்ளனர்.எனினும், ஐந்து நிமிடங்கள், ஆங்கிலத்தில், அவர்களால் உரையாட முடியவில்லை; ஒரு பக்கத்துக்கு, தப்பில்லாமல், ஆங்கிலத்தில் எழுத தெரியவில்லை.கண்ணை மூடி, ஒரு மொழியை எதிர்ப்பதால் எழும் பிரச்னையை, தமிழக அரசியல்வாதிகள் வேண்டுமானால், சந்திக்காமல் இருக்கலாம். ஆனால், சாதாரண பொதுஜனம், வேலை தேடும் இளைஞர்கள், கட்டாயம் பாதிக்கப்படத் தான் செய்கின்றனர்.
தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களுக்கு சென்றால், தமிழ் எடுபடாது; ஆங்கிலம் அனைவருக்கும் தெரியாது. அதற்காக, ஹிந்தி மொழி தான் வேண்டும் என, நான் சொல்லவில்லை. அந்த மொழியை எதிர்ப்பவர்கள், தமிழ் அல்லது ஆங்கில மொழியை வளர்க்க, மாணவர்கள் எழுத, பேச துாண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.
இப்போது யாராவது, சுத்தத் தமிழில் பேசினால், அவரை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதே, தமிழுக்கு எந்த அளவுக்கு நாம் மதிப்பு கொடுத்துள்ளோம் என்பதற்கான அளவீடு! எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சி, வாழ்க்கையை நினைத்து, மொழி எதிர்ப்பு விவகாரங்களில், அரசியல் கட்சிகள் தலையிட கூடாது. எந்த மொழியையும் பேசவும், எழுதவும், அவரவருக்கு உரிமை இருப்பது போல, பள்ளிகளில் மொழிகளை தேர்வு செய்வதிலும், பிறர் தலையீடு இருக்கக் கூடாது.கட்சிகளுக்கு தலைவர்களாக இருப்போர், தங்களின் சுய விளம்பரத்திற்காக, அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை காவு கொடுக்கக் கூடாது.நாட்டின் முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சியை, கட்சித் தலைவர்கள் கருத்தில் கொண்டால், 'உங்களால் எத்தனை மொழிகள் கற்க முடியுமோ, அத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்; இந்தியா முழுவதும் செல்லுங்கள்.உலகம் முழுவதும், தமிழ் இளைஞர்கள் வேலை பார்க்க வேண்டும்; உலகச் செல்வங்களை, தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும்' என்று தானே, கூற வேண்டும்!அதை விடுத்து, ஹிந்தியை திணிக்கின்றனர் என்று கூறி, மத்திய அரசுக்கு எதிராக, போராட அழைப்பு விடுத்து, தமிழக இளைஞர்களின் வாழ்வை சூனியமாக்குவதா?
தமிழகத்தில், பெரிய அளவில் தொழில்கள் துவங்குவதற்கு, நம் அரசியல் கட்சிகள், முட்டுக்கட்டை போடுகின்றன. இருந்த சில, பெரிய தொழிற்சாலைகளையும் மூட வைத்து விட்டன. வரவிருந்த, தொழில் திட்டங்களுக்கும், சாவு மணி அடித்தபடி உள்ளன. இப்படியே இருந்தால், நம் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்?
எனவே, அரசியல் கட்சியினரே... நீங்கள், முதலில் திருந்துங்கள். நம் எதிர்கால சந்ததிகளின் நலன்களை உணருங்கள்.இது, உலகளாவிய பொருளாதாரச் சூழல். தமிழகத்தில் தயாரிக்கும் ஒரு பொருள், தாய்லாந்தில் விற்பனையாகும். தென் ஆப்ரிக்காவில் உற்பத்தியாகும் ஒரு பொருள், அயர்லாந்தில் விற்பனையாகும். பிற மொழிகளை பயன்படுத்தி தான், வர்த்தகம் செய்ய முடியும். இல்லையேல், பிறர் உதவியைத் தான் நாட வேண்டும்.
நம் கம்ப்யூட்டர் இளைஞர்களின் மூளையில் உதித்த, 'சாப்ட்வேர்'கள், உலகின் பல வங்கிகளில், நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழில் மட்டும் தான் பேசுவோம்; பிற மொழிகளை பயன்படுத்த மாட்டோம் என்றிருந்தால், தமிழகம் முன்னேறுமா?இப்படித் தான், 'நவோதயா' பள்ளிகளை, நம் மாநிலத்திற்கு வர விடாமல், அரசியல் கட்சிகள் சதி செய்தன. கட்டணமே இல்லாமல், தரமான கல்வியை வழங்கும், மத்திய அரசின், உண்டு, உறைவிட பள்ளிகள், அனைத்து மாநிலங்களிலும் உள்ளன; தமிழகத்தில் இல்லை. ஹிந்தி எதிர்ப்பால், அந்த பள்ளிகளை வர விடாமல் செய்து விட்டனர்.
இப்படித் தான், சில மாதங்களுக்கு முன், மருத்துவ, 'நீட்' தேர்வுக்கு எதிராக, சில அரசியல் கட்சித் தலைவர்கள் கொடி பிடித்தனர். அதையும் மீறி, நம் தமிழக மாணவர்கள், அந்தத் தேர்வை, அதிக எண்ணிக்கையில் எழுதி, தேசிய அளவில், வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனரே!அதன் பிறகாவது, கட்சிகளின் தலைவர்கள் திருந்த வேண்டாமா?எனவே, உலக அளவில், நம் இளைஞர்கள் மேம்பட, தாய்மொழியாம் தமிழுடன், ஆங்கிலம், ஹிந்தி அல்லது மராத்தி போன்ற மொழிகள் அவசியமே. அது மட்டுமின்றி, பிற நாட்டு மொழிகளையும், நம் இளைஞர்கள் கற்க வேண்டும்.மதம், மொழி, இனம் என வேறுபடுத்தி, மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால், இளைஞர்களுக்கு, எந்த காலத்திலும் விமோசனம் கிடைக்காது.தமிழ் இளைஞர்களின் பாவம், அவர்களை சும்மா விடாது. ஒரு காலத்தில், அந்த அரசியல் தலைவர்களும், கட்சிகளும், விலாசம் இழந்து போவது நிச்சயம்!
ஏனெனில், இது, 1965 அல்ல; 2019ம் ஆண்டு. கல்வி மட்டுமின்றி, அனைத்து அம்சங்களும் உலகளாவிய அளவில், பரந்து விரிந்துள்ளன. 12 மணி நேரத்தில், உலகின் ஒரு மூலையிலிருந்து, மற்றொரு மூலைக்கு பறந்து விடலாம். இன்னமும், ஹிந்தி வேண்டாம் என, பொய் பிரசாரம் மேற்கொள்ளாதீர்.எத்தனை காலம் தான், அப்பாவி மக்களை ஏமாற்றுவீர்கள்... நீங்கள் எதிர்பார்ப்பது போல, நடக்காது. நம் தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் புத்திசாலிகள்!
மா.மனோகரன்
சமூக ஆர்வலர்
இ-மெயில்: mankalimanoharan@gmail.com