யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!

Updated : ஜூன் 09, 2019 | Added : ஜூன் 09, 2019 | கருத்துகள் (17)
அ.தி.மு.க.,  வெடித்தது, மோதல்


லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்த படுதோல்வி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, 'கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும்' என, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போர்க்குரல் எழுப்பியிருப்பது, மேலும், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்போடு இருந்தது. தமிழகத்தில், 1996ல் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது. 91 - 96 வரை ஆட்சியிலிருந்தும், நான்கு இடங்களில் மட்டுமே, அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே தோல்வியை தழுவினார்.அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக, கிளை செயலர்கள், தொண்டர்கள் என, அனைவரையும் அழைத்து, கட்சி தோல்விக்கான காரணத்தை, ஜெ., கேட்டறிந்தார். அதன் விளைவாக, 2001 தேர்தலில், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது.அடுத்து, 2004 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தோல்வியை சந்தித்தது.

மீண்டும், அனைத்து மட்ட நிர்வாகிகளையும் அழைத்து, ஜெ., ஆலோசித்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், 40க்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை நியமித்தார். தலைமை நிர்வாகிகள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை மாற்றங்கள் செய்தார்.இதன் காரணமாக, 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், 68 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.இவ்வாறு, தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதெல்லாம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை கட்டுக்கோப்பு குலையாமல், ஜெ., நடத்தி சென்றார். தற்போது, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., என்ற, இரட்டை தலைமை காரணமாக, கட்சி கட்டுப்பாடின்றி உள்ளது. கேப்டன் இல்லாத கப்பல் போல தத்தளித்து வருகிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 2021 வரை, ஆட்சியை நடத்தி செல்வதில் தான், கவனம் செலுத்துகின்றனர்; கட்சி நிலைக்க வேண்டும் என்பதை பற்றி கவலைப்படவில்லை. தோல்விக்கு காரணமானவர்கள் குறித்து, வேட்பாளர்கள் முறையிட்டும், தவறு செய்தவர்கள் மீது, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தேர்தலுக்கு முன், முதல்வர், இ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கைகளே ஓங்கி இருந்தன. அவர்களே முக்கிய முடிவுகளை எடுத்தனர். தேர்தல் முடிவுக்கு பின், இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் செல்வாக்கு குறைந்துள்ளது.ஏனெனில், இ.பி.எஸ்.,சின் சொந்த தொகுதியான, எடப்பாடியில், தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. தேனியில், ஓ.பி.எஸ்., மகன் வெற்றி பெற்றுள்ளார். மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. ஓ.பி.எஸ்., சொந்த தொகுதியான, போடியில், தி.மு.க.,வை விட, 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல், அ.தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றனர். இதனால், அமைச்சர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், கட்சி உடையும் அபாயம் உள்ளது.
இதை பிரதிபலிக்கும் வகையில், மதுரை வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, நேற்று, 'கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை. பொதுக்குழுவை கூட்டி, கட்சியை வழிநடத்தும் திறமை உடையவரை, தேர்வு செய்ய வேண்டும்' என, குரல் கொடுத்துள்ளார். இது, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கட்சியை வளர்க்க, ஆட்சியை தக்க வைக்க, முதல்வரும், துணை முதல்வரும், முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இரட்டை தலைமை என்பதால், யார் சொல்லுக்கு கட்டுப்படுவது என தெரியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என, பல அதிகார மையங்கள் இருந்தபோதிலும், யாரும் யாரோடும் எந்தவித ஆலோசனையும் நடத்துவதில்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், தனித்தே செயல்படுகின்றனர்.தேர்தலில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும், அதற்கான காரணம் குறித்து, ஆராயாமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால், கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எனவே, உடனடியாக தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரையும் அழைத்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து, கேட்டறிய வேண்டும்.தோல்வியடைந்த முக்கிய நிர்வாகிகளுக்கும், கட்சிக்காக பாடுபடுவோருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி அல்லது வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும். கீழ்மட்ட நிர்வாகிகளின் கருத்து அறிந்து, அதற்கு ஏற்ப, கட்சியை வழிநடத்த வேண்டும்.ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துக்களை அறிய வேண்டும். ஒற்றை தலைமை இருந்தால் நல்லது என முடிவெடுத்தால், ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.இத்தகைய அணுகுமுறைகள் வாயிலாக, கட்சியை பலப்படுத்தினால் தான், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலிலும், கட்சி களமிறங்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.* நமது நிருபர் -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X