சென்னை:'கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை, உடனடியாக கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் சேகரமாகும் அணுக்கழிவுகளை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, சேமித்து வைக்க, மத்திய அரசு திட்டமிடுகிறது.கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில், மே, 6ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 15 கட்டளைகளை பிறப்பித்தது. அணுக்கழிவுகளை, உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை, ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டும் என்பது, முக்கியமான நிபந்தனை; அது, இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், 2022க்குள் அணுக்கழிவுகள் சேமிப்பு மையத்தை கட்டி முடிக்க, உச்ச நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் கட்ட, அடுத்த மாதம், 10ம் தேதி, ராதாபுரத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடக்கும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது; இது, பேரதிர்ச்சி அளிக்கிறது.கூடங்குளத்தில், அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்து, தெளிவான திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கும் வரை, கூடங்குளத்தில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.கருத்துகேட்பு கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று, தங்கள் எதிர்ப்புகளை, அழுத்தமாகப் பதிவு செய்வர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் வைத்து, அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.