சென்னை:'அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வால், மருத்துவ வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தவறு,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
'நீட்' தேர்வில், சென்னை, அனகாபுத்துார், அரசு பள்ளி மாணவி ஜீவிதா, 605 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏழை குடும்பத்தை சேர்ந்த, அவரது படிப்பு செலவை ஏற்பதாக, தமிழிசை அறிவித்தார். நேற்று, அவரது வீட்டிற்கு சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்; படிப்புக்கு முன்பணமாக, 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.பின், நிருபர்களிடம், தமிழசை கூறியதாவது:
அரசு பள்ளியில் படித்த ஜீவிதா, இரண்டு முறை, 'நீட்' எழுதி, 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வரும் அவநம்பிக்கையை, இந்த மாணவி பொய்யாக்கி உள்ளார். உயிரிழப்புகள் ஏற்படும் போது, இதுபோன்று நடக்கக் கூடாது என்று கூறுவதற்கு பதில், அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை, அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.
இந்த தேர்வால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தவறானது. இதற்கு, ஜீவிதா ஒரு எடுத்துக்காட்டு. சுயலாபம், சுய அரசியலுக்காக, அனைத்திலும் அரசியல் செய்கின்றனர். மாணவர்களே, மற்ற மொழிகளை கற்க விரும்பினாலும், எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. தமிழகம் பாதிப்படையும் அளவிற்கு, எந்த திட்டத்தையும், மத்திய அரசு கொண்டு வராது.இவ்வாறு, அவர் கூறினார்.