கொள்கையை மாற்றினேன்..! - நடிகை ரித்விகா| Dinamalar

கொள்கையை மாற்றினேன்..! - நடிகை ரித்விகா

Added : ஜூன் 09, 2019
கொள்கையை மாற்றினேன்..! - நடிகை ரித்விகா

அன்ன நடை, எளிய உடை, கவரும் முகபாவனை என நம் பார்வைக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணாய் காட்சி தரும் நடிகை ரித்விகா, அன்பு, கோபம், வேகம், விவேகம் நிறைந்த கள்ளம் கபடமற்ற யதார்த்தப் பெண். நுாறு நாட்கள் 'பிக் பாஸ்' வீட்டில் தங்கி தன் உண்மை முகத்தை காட்டி வியக்க வைத்து 'பிக் பாஸ்' பட்டத்தையும் பிடித்தார். வெற்றிப் பாதையில் பயணிக்கும் இவர் தன் சினிமா வாழ்க்கை குறித்து 'தினமலர்' சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்.
* கைவசமுள்ள சினிமா வாய்ப்புஅட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'கடவர்' என்ற தலைப்பில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் அமலா பாலுடன் நடிக்கிறேன். விஜய் சேதுபதி நடிக்கும் 'நம்மவன்' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். இப்படம் வெளிவந்ததும் என் கதாப்பாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.
* 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் உங்களின் யதார்த்தம் நடிப்பா...!நான் ஏன் நடிக்க வேண்டும். என் இயல்பே இதுதான். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நடிக்கவில்லை.
* மகிழ்ச்சி தந்த விருதுகள்'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் ஆனது மகிழ்ச்சி. சிறந்த துணை நடிகைக்கான விருதை மெட்ராஸ் படத்துக்காக பெற்றேன். இருமுறை சிறந்த துணை நடிகைக்கான போட்டிக்கும் தேர்வானேன். என் திறமையை வளர்க்க கிடைத்த அங்கீகாரம் இவை.
* சினிமாவுக்கு வந்தது எப்படிசென்னையில் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்தேன். பின்பு எம்.பி.ஏ., முடித்தேன். தனியார் நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும் என நினைத்திருந்தேன். சினிமாவை பற்றி சிந்தித்ததே இல்லை. இருப்பினும் கல்லுாரி காலத்தில் குறும்படம் ஒன்றில் நடித்தேன்.அதை பார்த்த இயக்குனர் பாலா தொடர்பு கொண்டு பரதேசி படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். பின் படிப்படியாக வாய்ப்புகள் வரத்துவங்கின. நானும் என் கொள்கையை மாற்றிக்கொண்டேன்.
* 'பிக்பாஸ்'க்கு பின் வாய்ப்புகள் எப்படி'பிக்பாஸ்'க்கு முன்பு, பின்பு என்று பிரிக்க முடியாது. என் நடிப்பை வைத்தே வாய்ப்புகள் வருகின்றன.
* 'டார்ச் லைட்' படத்தில் விபச்சார பெண்ணாக நடிக்க துணிந்தது எப்படி.பிற கதாபாத்திரங்களைப் போலவே இதுவும் ஒன்று. இப்பாத்திரத்தை ஏற்றதில் தவறு இல்லை. சினிமா என்பது நடிப்பு தானே.
* எம்.ஜி.ஆர்., படத்தில் ஜானகி ராமச்சந்திரனாக நடிக்கிறீர்களாமே...!இல்லை. அப்படியொரு படத்தை எடுப்பதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இயக்குனர் நாடினார். ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்துக்கு நான் கச்சிதமாக பொருந்துவேன் எனக் கருதினார். இதற்கிடையே அப்படம் கைவிடப்பட்டுவிட்டது.
* நீங்கள் நடித்ததில் பிடித்த படம்.கபாலி உட்பட அனைத்துப் படங்களுமே எனக்கு பிடித்தமான படங்கள் தான்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X