ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட 30 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தள்ளப்பட்டது. மேலும் இங்கு பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ. 20 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாயப்பட்றைகள் இயற்øக்கு கேடு விளைவித்து வரும் அபாயகரமானதாக இருந்து வருகிறது. நீர்நிலைகள் பெரும் பாதிப்பை சந்திப்பதுடன், குடிநீர் விஷத்தன்மை, நிலத்தடி நீர் பாதிப்பு , விவசாயம் பாதிப்பு, மற்றும் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளன. இதனை கட்டுப்படுத்த விவசாயிகளும், சமூக ஆவர்லர்களும் கோர்ட்டை அணுகினர்.
கோர்ட் மூலம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிடி இறுகியதை அடுத்து திருப்பூரில் இருந்து பல சாயப்பட்டறைகள் ஈரோட்டுக்கு இடம் பெயர்ந்தன. கோர்ட் உத்தரவுப்படி சட்டத்திற்கு புறம்பாக, செயல்படும் சாயப்பட்டறைகள் கண்டுபிடிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிளீச்சிங், டையிங், பிரிண்டிங் என ஈரோட்டில் 32 சாய ஆலைகள் கண்டறியப்பட்டது. வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், பி.பி அக்ராஹரம், காசிபாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஆர்.டி.ஓ., சுகுமாறன் தலைமையில் நடவடிக்கை எடுக்க களம் இறங்கினர். வருவாய்துறையினர் , மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இங்குள்ள இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் இருக்கும். சில ஷெட்டுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளப்பட்டன.
இந்த ஆலைகள் வைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோட்டில் இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விவசாய சங்கத்தினர் வரவேற்பு : அதிகாரிகளின் இன்றைய நடவடிக்கைக்கு பல தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர், காளிங்கராயன் பாசன விவசாய சங்க தலைவர் வேலாயுதம் கூறியதாவது: சமீப காலமாக அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இன்னும் 100 க்கும் மேற்பட்ட ஆலைகள் அனுமதியின்றி ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இதனையும் கண்டுபிடித்து சீல் வைக்க வேண்டும். அனுமதி பெற்று இயங்கும் ஆலைகளில் அளவுக்கு மீறி பல ஆயிரம் மீட்டர் துணிகள் பதப்படுத்தப்படுகிறது. இதனையும் கண்டுபிடிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE