பதிவு செய்த நாள் :
இலங்கை குண்டு வெடிப்புகளில்
உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி

கொழும்பு: இலங்கைக்கு அரசு முறை பயணமாக சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சர்ச்சுகள் மற்றும் ஓட்டல்களில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை, மோடி ,அஞ்சலி,ஈஸ்டர்,பண்டிகை


மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள, நரேந்திர மோடி, முதல் வெளிநாட்டுப் பயணமாக, அண்டை நாடுகளான, மாலத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

ஈஸ்டர் பண்டிகை:


நேற்று முன்தினம், மாலத்தீவுகள் சென்ற அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கிருந்து, இலங்கைக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில், அந் நாட்டு பிரதமர், ரணில் விக்கிரமசிங்கே, அவரை வரவேற்றார். இலங்கையின் கொழும்பில் உள்ள, செயின்ட் ஆண்டனி சர்ச் உட்பட, மூன்று சர்ச்சுகள், பிரபல நட்சத்திர ஓட்டல்களில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், ஈஸ்டர் பண்டிகையின்போது, தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது, இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருந்தார்.

கோழைத்தனம்:


இந்த நிலையில், அந்த தற்கொலைப் படை தாக்குதலுக்குப் பிறகு, இலங்கைக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவரான மோடி, விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, செயின்ட் ஆண்டனி சர்ச்சுக்கு சென்றார். தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தினார். 'கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்களால், இலங்கை மக்களின் மன உறுதியை அசைக்க முடியாது.

இலங்கை மீண்டும் எழுந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது. 'ஆதரவு கரம் நீட்ட எப்போதும் இந்தியா தயாராக உள்ளது' என, சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், மோடி குறிப்பிட்டு உள்ளார். அதைத் தொடர்ந்து, அதிபர் மாளிகைக்கு சென்ற அவருக்கு, அதிபர் மைத்ரிபால சிறிசேன, சிறப்பான வரவேற்பு அளித்தார். அதிபர் மாளிகையில், அசோக மரக் கன்றுகளை பிரதமர் மோடி நட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

உறுதி:


அந்நாட்டு பிரதமர், ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க் கட்சித் தலைவர், மகிந்த ராஜபக்சே ஆகியோரையும், மோடி சந்தித்து பேசினார். தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவரான, சம்பந்தன் உள்ளிட்டோரையும், பிரதமர் மோடி சந்தித்தார். இலங்கை பயணம் குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: பயங்கரவாதம் என்பது மிகப் பெரிய சவால் என்பதை, இரு நாடுகளும் உணர்ந்து உள்ளன. இதை எதிர்கொள்ள, இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மாலத் தீவுகளில்...


மாலத் தீவுகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த நாட்டு அதிபர், இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்தார். அந்த நாட்டின் பார்லிமென்டில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

மாலத் தீவுகளில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தின் முக்கிய அம்சங்கள்:
● நம் நாட்டில், ஐ.ஏ.எஸ்., எனப்படும், இந்திய ஆட்சிப் பணிகள் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், என்.சி.ஜி.ஜி., எனப்படும், தேசிய சிறந்த நிர்வாக மையம், மாலத்தீவுகள் ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

● நம் நாட்டின், கேரளாவின் கொச்சி நகரில் இருந்து, மாலத்தீவுகளின் தலைநகர் மாலேவுக்கு, பயணியர் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. கொச்சி - மாலே இடையே, 700 கி.மீ.,க்கு இயக்கப்படும் இந்த கப்பலால், வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது

● இந்தியா உதவியுடன், மாலத்தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள, கடலோர கண்காணிப்பு ரேடார் திட்டத்தை, மோடி மற்றும் அந்த நாட்டு அதிபர் சோலிஹ் துவக்கி வைத்தனர். இதைத் தவிர, மாலத்தீவுகள் ராணுவத்துக்கான பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தனர்

● சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற, மாலத் தீவுகளில் அமைந்துள்ள, 'பிரைடே மாஸ்க்' எனப்படும், மசூதி உலகப் புகழ்பெற்றது. கடந்த, 1658ல், கடல் பாறைகளால் அமைக்கப்பட்டது, இந்த மசூதி. யுனெஸ்கோவின் பாரம்பரிய புராதன சின்னங்களில் ஒன்றாக உள்ளது. இதன் பராமரிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Advertisement

முஸ்லிம் பிரபாகரன்; சிறிசேன எச்சரிக்கை:

இலங்கையின், முல்லைத்தீவு பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்நாட்டின் அதிபர், மைத்ரிபால சிறிசேன பேசியதாவது: சர்ச்சுகளில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. நாடு பிளவுபடுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பிளவுபட்டால், அது அனைவருக்கும் இழப்பாகும். நாடு மற்றொரு உள்நாட்டு போரை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். தனி ஈழம் கேட்டு, விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரன் போரிட்டார். அதுபோல, முஸ்லிம் பிரபாகரன் உருவாக அனுமதிக்கக் கூடாது. மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், தற்போது மத ரீதியில் பிரிந்திருப்பது ஆபத்தானது. இவ்வாறு, அவர் பேசினார்.


குடை பிடித்தார் அதிபர்:

இலங்கை அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது, திடீரென மழை பெய்தது. அப்போது, அதிபர் சிறிசேன, குடையை வாங்கி, மோடிக்கும் சேர்த்து பிடித்தார். இந்த பண்பு, சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டது.


திருப்பதியில் தரிசனம்:

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, நாடு திரும்பிய பிரதமர் மோடி, நேற்று திருப்பதி திருமலையில், சுவாமி தரிசனம் செய்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க நேற்று மாலை, திருப்பதி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, ஆந்திர கவர்னர், முதல்வர் ஜெகன்மோகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர், மலர்செண்டு அளித்து வரவேற்றனர். பின், அவர் திருமலை சென்று, சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, திருப்பதியில் நடந்த, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, ''லோக்சபா தேர்தலில், தோல்வியை தழுவிய கட்சி தலைவர்கள், அதில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியாத நிலையில் உள்ளனர். மக்கள் மனதை கவர, பா.ஜ., கட்சி, 365 நாட்களும் மக்கள் சேவையில் ஈடுபடும்,'' என்றார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்த மோடி, ''வளம் பொருந்திய ஆந்திராவிற்கு நலத் திட்டங்களை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில், ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ., வலுப்பெறும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X