சென்னை : தமிழ் திரையுலகில், சிறந்த நகைச்சுவை நடிகர், புகழ்பெற்ற நாடக ஆசிரியர், திரைக்கதாசிரியர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த கிரேஸி மோகன், மாரடைப்பால் காலமானார். அவருக்கு நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நெஞ்சுவலி காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார். முதல்முறை வந்த நெஞ்சுவலியிலேயே அவர் இறந்தது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ரசிகர்களை குலுங்க,குலுங்க சிரிக்க வைத்தவருக்கு நெஞ்சுவலியா என்று கிரேஸி மோகனுடன் பணியாற்றிய பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சார்லி : ''பொய்க்கால் குதிரை படத்தில், மோகனுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் ஒரு தனித்திறன் கொண்ட நகைச்சுவை நடிகர். ஒரு வாரம் முன்னர் கூட கிரேஸி மோகனுடன் பேசினேன். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு,'' என்றார்.
நடிகர் ராதாரவி : ''அவர் எனது சகோதரரை போன்றவர். அவரது இழப்பு நகைச்சுவை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நான் இப்போது வெளியூரில் உள்ளேன். சென்னை வந்ததும், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவேன்,'' என்றார்.
நடிகர் பாண்டு : ''கதை வசனம், நாடகம் மூலமாக அழிக்க முடியாத தடம் பதித்தவர். நடிகர் கமல்ஹாசனுக்கு கூட அவரை மிகவும் பிடிக்கும். தாங்க முடியாத இழப்பு அது,'' என்றார்.
நடிகர் தியாகு : '' அவரது வியட்நாம் காதலி, காதலா காதலா என்ற படங்களில் பணியாற்றி உள்ளேன். கலை உலகிற்கு அவரது இழப்பு பேரிழப்பு. காமெடி காட்சிகளில் மிகவும் அநாயசமாக நடிக்கும் திறன் வாய்ந்தவர். கமலின் பல படங்கள் ஹிட்டாக காரணமே கிரேஸி மோகன் தான். அவரது புகழ் திரையுலகில் நிலைத்து நிற்கும்,'' என்றார்.
நடிகை சச்சு : '' தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் நல்ல நண்பர், அவரது நகைச்சுவை மறக்க முடியாதவை'' என்றார்.
நடிகர் எஸ்.வி.சேகர் ; '' கிரேஸி ஆகும் முன்னரே மோகன் எனக்கு பள்ளி நண்பர். அவரது இறப்பு அதிர்ச்சியளிக்கிறது. விரசம், ஆபாசம் இல்லாத நகைச்சுவை வசன கர்த்தா, கடவுள் நம்பிக்கையாளர். நல்ல ஓவியரும் கூட. கடவுள் மேல் வெண்பா கவிதைகள் புனைந்துள்ளார். சாக்லேட் கிருஷ்ணா போன்ற குழந்தைகள் விரும்பும் நாடகங்கள் தந்தவர். கமலுடன் அவர் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களுமே ஹிட் தான். அவரது ஆத்மா சாந்தியடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
கமல் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை : நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர். 'கிரேசி' என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் 'நகைச்சுவை ஞானி'.

அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர். அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி உடன் இணைந்து நண்பர் மோகனின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.
நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன? மோகனின் நகைச்சவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக் குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு கமல் கூறியிருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE