புதுடில்லி : பாலகோட்டில் நடத்தியதை போல் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை இந்தியா நடத்தக்கூடும் என்ற பயம் காரணமாக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை, அந்நாடு மூடி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அமைப்புக்களும், இந்தியாவும் அளித்து வரும் தொடர் அழுத்தம் காரணமாக சில மாதங்களாக பாக்.,ல் செயல்பட்டு வரும் பல பயங்கரவாத முகாம்களை அந்நாடு மூடி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாக்., அடைக்கலம் அளித்து வருவதற்கான ஆதாரங்களையும் சர்வதேச அரங்கில் இந்தியா சமர்பித்ததால், பாக்.,கால் அதை மறுக்க முடியவில்லை.

இந்தியா அளித்துள்ள தகவலின்படி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 11 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 5 மட்டுமே உள்ளது. லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புக்கள் தங்களின் முகாம்களை தற்காலிகமாக மூடி உள்ளன.
எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி செயல்பட்டு வந்த பயங்கரவாத பயிற்சி மையங்களும் மூடப்பட்டுள்ளன. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பயங்கரவாத ஊடுருவல் ஏதும் நடைபெறவில்லை என்றே சொல்லப்படுகிறது.

புலனாய்வு அமைப்புகள் பலவும் அளித்துள்ள தகவலின்படி, பயங்கரவாத முகாம்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ பயங்கரவாத முகாம்களை மூடும் படி பயங்கரவாத அமைப்புக்களுக்கு பாக்., ராணுவம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்ட கண்காணிப்பில் இது உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை இந்தியா நடத்துமோ என்ற அச்சம் காரணமாக பயங்கரவாத முகாம்களை மூட அறிவுறுத்தியதுடன், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என இந்தியாவிடம் பாக்., கோரிக்கை வைத்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE