புதுடில்லி : எதிரிகளின் தாக்குதலில் இருந்து தலைநகர் டில்லியை பாதுகாக்க பல கோடி ரூபாய் செலவில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவின் தலைநகராக விளங்கும் டில்லி, எல்லைக்கு அருகில் உள்ளதால், எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் டில்லி வாழ் மக்களின் பாதுகாப்பையும், முக்கிய சின்னங்களையும் பாதுகாக்க, ஏவுகணை தடுப்பு கவசத்தினை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவிடமிருந்து ரூ.6 ஆயிரம் கோடி செலவில் ஏவுகணை எதிர்ப்பு தடவாளங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த பாதுகாப்பு கவசம் 5 அடுக்குகளை கொண்டது.

முதல் அடுக்கு
முதல் அடுக்கு டில்லியின் புறநகர் பகுதியில் அமைய உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய இரண்டு தளவாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தடவாளம் ஒன்றில் பிரித்வி ஏவுகணை தடுப்பு மற்றும் தடவாளம் இரண்டில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை முறியடிக்கும் அமைப்பு இருக்கும்.

இரண்டாம் அடுக்கு
இரண்டாம் அடுக்கு டில்லியை சுற்றியிருக்கும். இதில் ரஷ்யாவிடமிருந்து வாங்க உள்ள டிரம்ப் என்னும் ஏவுகணை முறியடிப்பு சாதனம் இடம் பெற்றிருக்கும். இந்த சாதனம் மூலம் 400 கி.மீ.,க்கு அப்பால் வரும் எதிரி நாட்டின் 100 வான்வெளி இலக்குகளை கண்டறிய முடியும். டிரம்ப் 400, ரக அமைப்புகளில் ஐந்தை, வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

மூன்றாம் அடுக்கு
மூன்றாம் அடுக்கில் பாரக் ரக ஏவுகணைகள் இருக்கும். தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் பாரக் ஏவுகணைகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், ஆளில்லா குட்டி விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை அழிக்கும் வல்லமை கொண்டவை.

நான்காம் அடுக்கு
டில்லியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நான்காவது வளையத்தில் ஆகாஷ் ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். விண்ணில் இலக்கை குறிவைத்து அழிக்கும் தன்மை கொண்ட ஆகாஷ் ஏவுகணை, 60 கிலோ வெடி மருந்தை தாங்கிச் சென்று 30 கி.மீ., தூரத்தில் உள்ள எதிரி இலக்கை தூளாக்கும் வல்லமை கொண்டவை. 18 கி.மீ., உயரத்தில் உள்ள இலக்கையும் அழிக்கும். இந்தியாவிடம் இப்போது சுமார் 3,000 ஆகாஷ் ரக ஏவுகணைகள் உள்ளன.

ஐந்தாம் அடுக்கு
இந்த நான்கு வளையங்களையும் காக்கும் கடைசி அடுக்கில் நாசாம்ஸ் ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகளை ஏவும் நாசாம் ஏவுகணை இயந்திரம், அதனுடன் இணைந்த, வான் வெளி எதிரி இலக்கை துல்லியமாக அடையாளம் காட்டும் ரேடார்கள், ரேடார்களிடம் இருந்து சிக்னல் பெற்று எதிர் இலக்கை துல்லியமாக வரையறுத்து காட்டும் கருவி, இலக்கை நோக்கி ஏவுகணைகளை ஏவும் கருவி, ஏவுகணைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
தொடர்ந்து எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள துப்பாக்கி படையும், ஆளில்லா குட்டி விமானங்களை கூட கண்டறிந்து அழிக்கும் தொழில் நுட்பமும் இடம் பெற்றிருக்கும். இந்த 5 பாதுகாப்பு வளையங்களின் மூலம் புதுடில்லியை முழுமையாக எந்த போர் சூழலில் இருந்தும் காக்கும் ஏற்பாட்டை மத்திய அரசு உருவாக்க தயாராகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE