தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவார்: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை, மத்திய அரசு, காஷ்மீரில் தான் எடுக்க வேண்டும். அதற்காக, மற்றொரு நாடான, பாகிஸ்தானுக்குள் புகுந்து, தாக்குதல் நடத்தியது, சரியான நடவடிக்கை அல்ல.
டவுட் தனபாலு: பயங்கரவாதிகள் என்ன செய்தாலும், கைகட்டி வேடிக்கை பார்க்கணும்னு எதிர்பார்க்குறீங்களோ... உங்களின் மனநிலை இது தான் என்பதை, இவ்வளவு தாமதமாக வெளிக்காட்ட என்ன காரணம்... பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை, மக்கள் அங்கீகரித்ததால் தான், பா.ஜ., இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கு... மக்கள் பக்கம் நிற்காமல், நீங்கள் ஏன் எதிர் திசையில் நிற்குறீங்க என்ற, 'டவுட்' வருதே...!
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்: கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெறும் வகையில், டில்லி, ஹரியானா, ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில், தனித்து போட்டியிட்டு, எங்கள் பலத்தை நிரூபிப்போம்.
டவுட் தனபாலு: நீங்க குறிப்பிடும் மாநிலங்களில், ஆட்சி முடிய இன்னும் காலம் கிடக்கு... இதை, இப்போது திடீர்னு சொல்வதற்கு என்ன காரணம்... கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெறும் யோசனை, மத்திய அமைச்சரவையில், உங்க கட்சிக்கு அதிகப்படியான இடம் ஒதுக்கப்படாத பின்னர் தான் உதித்ததா என்ற, 'டவுட்' ஏற்படுதே... இதில் எதற்கு இவ்வளவு ரகசியம்...!
ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ: சென்னை -- சேலம், எட்டு வழிச்சாலை தொடர்பாக, மக்களை சமரசப்படுத்த, முதல்வர், இ.பி.எஸ்., முயற்சிக்கிறார். அவரின் சமரச முயற்சியை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
டவுட் தனபாலு: மக்களுக்காகத் தானே திட்டங்கள்... அரசு அளிக்கும் விளக்கத்தாலும், முதல்வர் மேற்கொள்ளும் சமரசத்தாலும், மக்களே அதை வரவேற்கத் துவங்கினால், அதில், அரசியல்வாதிகளான உங்களுக்கு என்ன பாதிப்பு... நீங்க, ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த, எதற்கு இப்படி கொம்பு சீவுறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'