வாழ்க்கையை தொலைக்கும் 'வாட்ஸ் அப்': வாரிச்சுருட்டும் அதிகாரிகள் 'கப்சிப்'

Added : ஜூன் 11, 2019 | |
Advertisement
கொளுத்தும் வெயில் சற்று தணிந்து, கருமேங்கள் கண்ணாமூச்சி காட்டி கொண்டிருந்த ஒரு மாலை வேளை. சித்ராவும், மித்ராவும் கணியாம்பூண்டியில் நடந்த ஆன்மிக விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அணைப்பாளையத்தில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு, வரும் பாலத்தை பார்த்த சித்ரா, ''ஏன்... மித்து. தினமும், 2 மணி நேரம் வேலை செஞ்சிருந்தா கூட, பாலத்தை முடிச்சிருக்கலாம்,''''ஆமாங்க்கா...
வாழ்க்கையை தொலைக்கும் 'வாட்ஸ் அப்': வாரிச்சுருட்டும் அதிகாரிகள் 'கப்சிப்'

கொளுத்தும் வெயில் சற்று தணிந்து, கருமேங்கள் கண்ணாமூச்சி காட்டி கொண்டிருந்த ஒரு மாலை வேளை. சித்ராவும், மித்ராவும் கணியாம்பூண்டியில் நடந்த ஆன்மிக விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அணைப்பாளையத்தில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு, வரும் பாலத்தை பார்த்த சித்ரா, ''ஏன்... மித்து. தினமும், 2 மணி நேரம் வேலை செஞ்சிருந்தா கூட, பாலத்தை முடிச்சிருக்கலாம்,''

''ஆமாங்க்கா... கரெக்டா சொன்னீங்க. இடையில் ரயில்வே உள்ளது. அப்புறம் சிலர் கோர்ட்டுக்கு போயிருக்காங்க. அதனால, ஜவ்வு மிட்டாய் மாதிரி பாலம் பணி ஆயிடுச்சு,''

ரயில்வே டிராக்கை ஒட்டி, பிளாஸ்டிக் குப்பைகளை தீ வைத்து விட்டு சென்றார், ஒரு சுகாதார தொழிலாளி. வண்டியை நிறுத்திய சித்ரா, ''நீங்களே இப்படி செய்யலாமா. ஏற்கனவே, பொல்யூஷன் பிரச்னை தலைவிரிச்சாடுது. கவர்மென்ட்டே விளம்பரம் செய்யுது. நீங்க என்னடான்னா...?'' என்றாள்.

அதைக்கேட்ட அவர், ''எங்களை என்னம்மா பண்ண சொல்றீங்க. ஆபீஸர் சொல்றதைத்தானே கேட்க முடியும்?'' என்று சொல்ல, ''ஆமாமா... மொதல்ல அவங்க திருந்தணும்,'' என்றவாறே வண்டியை கிளப்பினாள்.

அதே வழியில், ஆர்.டி.ஓ., சகிதம் பணியாளர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 'போலீஸ்' என்ற ஸ்டிக்கருடன் வந்த ஒரு வேனை பிடித்து விசாரித்தனர். வேனுக்குள் புளி மூட்டை மாதிரி குழந்தைகளை அடைத்திருந்தனர்.

அதைப்பார்த்து கோபப்பட்ட அதிகாரி, வேனை பறிமுதல் செய்து, டிரைவரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

''மித்து. அது என்னன்னு போய் பாரு?''

இரண்டு நிமிடம் கழித்து வந்த மித்ரா, ''அக்கா.. அது ஆயுதப்படையில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் சொந்தக்காரர் வாகனமாம்,'' என்றவாறு, வண்டியில் உட்கார, சித்ரா புறப்பட்டாள்.

''யாரோ போலீசுன்னா, அவரு இப்படி பண்ணலாமா. சிவியரா பனிஷ்மென்ட் கொடுக்கோணும்,'' என்ற சித்ரா, ''ஏய்... மித்து, பங்ஷனுக்கு, கவிதா வர்றாளான்னு கேளு,'' என்றதும், மித்ரா மொபைல்போனில் டயல் செய்தாள். ''அவள் வரலியாம். விஜிக்கா வீட்டில் ஏதோ பங்ஷனாம்,'' என, பதில் கொடுத்தாள்.

''சரி விடு.. ஆமா.. எல்லா ஸ்கூல் பஸ்களுக்கும், என்.ஓ.சி., கொடுத்துட்டாங்களா?''

''ஆமாங்க்கா. ஸ்கூல் திறக்கறதுக்கு, மூணு நாளைக்கு முன்னாடி, 212 வண்டிக்கு 'மெமோ' கொடுத்தாங்களாம். ஆனா, ஸ்கூல் திறந்த மறுநாளே, 1,430 வண்டிகளையும், ஓ.கே., பண்ணிட்டாங்களாம். இந்த, ஆய்வோட அருமை போக போகத்தானே தெரியும்,''

அப்போது, கார்ப்பரேஷன் வண்டி ஒன்று செல்லவே, அதைப்பார்த்த சித்ரா, ''கார்ப்ரேஷன் ஆபீசருங்க, ஆக்கிரமிப்பு குறித்து, ஆய்வுக்கு போறதுக்கு முன்னாடியே, சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு விஷயம் தெரிஞ்சிடுதாம்.

''சமீபத்தில்கூட, யூனியன் மில் ரோட்டில் ஆய்வு என்று தெரிந்து கொண்ட சிலர், கடையை திறக்காமல் விட்டுவிட்டனராம். கறுப்பு ஆடுகள் எங்குதான் இல்லை?'' என்று சொல்லி சிரித்தாள்.

''ஆமா... கலெக்டர் ஆபீசில் ஆய்வு மீட்டிங் எப்படி போனதுங்க்கா?'' என, கலெக்டர் ஆபீசுக்கு தாவினாள்.

''அமைச்சர் ஆய்வு செஞ்சாரா, எம்.எல்.ஏ.,க்கள் செஞ்சாங்களானு எல்லோரும் பேசிக்கறாங்க. எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாம, வேளாண்துறை, வேளாண் வணிகத்துறையில, கோடிக்கணக்கான மதிப்பீட்டில் கட்டடம் கட்டியிருக்காங்க. தகவல் சொல்லாமலே, விழா நடத்துறாங்கன்னு, எம்.எல்.ஏ.,க்கள் புகார் வாசிச்சாங்களாம்,''

''லோக்சபாவில், 'வாஷ் அவுட்' ஆகியும், வீராப்பு குறையல போல,'' என்றாள் மித்ரா.

''டவுன் பிளானிங் ஆபீசில் ஏதாவது பிரச்னையா, என்ன?''

'''ஆமாங்க்கா, அந்த அதிகாரிய பார்க்கவே, பல நாள் தவம் இருக்கணுமாம். திருப்பூர் மண்டலம் பிரிச்சதும், 'லம்ப்'பா வருமானம் கொடுக்கற 'பைல்'கள், சேலம், கோவையிலயே வச்சுட்டாங்களாம்; மத்த 'டம்மி' பைல் மட்டும், திருப்பூர் வந்திருக்காம். அதனாலதான், எந்த பைலயும் தொடாம வச்சிருக்காங்களாம்,''

''கப்பம் கட்டாம, நம்ம ஆபீசருங்க வேலை செய்வாங்களா?'' கேட்ட சித்ரா, ''இந்த மாணிக்காபுரம் சொைஸட்டிஎலக் ஷன் என்னாச்சு?''

''அந்த சொசைட்டி செயலாளரை, அலிகேஷனில் சஸ்பென்ட் செஞ்சுட்டாங்க. 'ரிட்ைடயர்டு' ஆன துணை பதிவாளரை காப்பாத்தி விடணும்னு, கூட்டுறவுத்துறையும், மந்தமாத்தான் விசாரணை பண்ணிட்டு இருக்காம்,''

''செயலாளர் மற்றும் தலைவர் சேர்ந்து தானே, கையெழுத்து போட்டு, பணம் பரிவர்த்தனை செய்றாங்க. அப்படீன்னா, மாஜி தலைவர் மீது நடவடிக்கை இல்லையான்னு, சங்க உறுப்பினர்கள் கலெக்டர்கிட்ட கேட்டுட்டு இருக்காங்களாம்,''

''ஊழல் புகாரை விசாரிக்காமலேயே, ரத்தான தேர்தலை, அவசர அவசரமா நடத்தி முடிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''அரசியலில், லேட்டஸ்ட் ஏதேனும் உண்டா, மித்து?''

''லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிடுவதில், மாஜி மினிஸ்டர் உறுதியாக இருக்காராம். அதேபோல, மாஜி பெண் மேயர், சூரியக்கட்சி மாஜி மேயர், என மூவரும், 'மேயர்' கனவில்தான் வலம் வருகின்றனராம்,''

''அப்படின்னா மூன்று மாஜிக்கள் களமிறங்கும் தேர்தல் களை கட்டப்போகுதுன்னு சொல்லு,''

அப்போது, மித்ராவின் மொபைல்போன், 'திருடனாய் பார்த்து, திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது,'என்ற பாடல் ரிங் டோனாக ஒலித்தது.

மித்ரா பேசும் வரை காத்திருந்த சித்ரா, ''என்னடி, பாட்டில், ஏதோ சொல்ல வர மாதிரியிருக்கு,'' என்றாள்.

''அக்கா... நீங்க பாஸ்பரஸ் மாதிரி 'கப்'னுபுடிச்சிட்டீங்களே...''

''யெஸ், மித்து''

''ஊதியூர் அருகே நிழலியில், ஒரு கும்பல் மண் அள்ளியிருக்கு. இதையறிந்த, போலீசார் சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுக்கு தகவல் கொடுத்தாங்க,''

''சரிடி... இதில் என்ன இருக்கு?''

''அதுக்கு அப்புறம்தான், 'டிவிஸ்ட்'இருக்குங்க்கா,''

''சும்மா... பில்டப் பண்ணாம சொல்லுடி''

''மண் அள்ளிய வாகனத்தை பறிமுதல் செய்தவர்கள், அலுவலகத்துக்கு கொண்டு செல்லாமல், ரோட்டோரம் நிறுத்தி பேரம் பேசினாங்களாம். ஒரு வழியாக, பேரம் முடிஞ்சு, 'லகரத்தில்' கிடைச்சுதாம். அதனை, முக்கால் பங்கு ரெவின்யூக்கும், கால் பங்கு போலீசுக்கு பிரிச்சுட்டாங்களாம்,''

''ஆக, மொத்தத்தில், மணல் விவகாரத்தில், கூட்டு போட்டு சம்பாதிக்கிறாங்கன்னு சொல்லு,'' என்றாள் மித்ரா.

''அக்கா.. இன்னொரு போலீஸ் மேட்டரை கேளுங்க. ரயில்வே தண்டவாளத்தில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரயில்வே போலீஸ்க்கு விடிகாலையிலேயே தெரிஞ்சிடுச்சு. ஆனா, கேைஸ வடக்கு ஸ்டேஷனுக்கு தள்ளிவிடறதில், குறியாக இருந்தனர்,''

''கமிஷனர் காதுக்கு விஷயம் போனதும், ரயில்வே போலீஸ்தான் விசாரிக்கணும்னு சொல்லிட்டாரு. ரயில்வே இன்ஸ்பெக்டர், கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல், செயல்பட்டிருக்காங்க. ஒருவர் தானாகவே கோர்ட்டில் சரணடைந்ததால்தான், பிரச்னை முடிஞ்சிருக்கு. கஞ்சா விக்கற பிரச்னையிலதான் கொலை நடந்துச்சாம்,''

''உண்மைதான்டி... திருப்பூரில் வரவர கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்குது. முக்கியமா, அண்ணாநகர் பகுதியில் வீடுகள் உள்ள இடத்தில், முள்ளு காட்டுக்குள் கஞ்சா விற்பனை 'துாள்' பறக்குதாம். அந்த பகுதியை சேர்ந்த பசங்க, கஞ்சாவுக்கு, அடிமையாகி வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்காங்க. போலீசுக்கு தெரிஞ்சேதான் விக்கிறாங்களாம்,''

''ஆமாங்க்கா.... சென்ட் பர்சென்ட் சரிங்க்கா! கஞ்சாவை விட இப்ப 'வாட்ஸ்அப்' போதை பலருக்கு பிடிச்சுருச்சு. வயசு வித்தியாசம் இல்லாமல், எல்லோரும், எப்ப பார்த்தாலும், 'சாட்டிங்' பண்றது, பேசறதுன்னு இருக்காங்க,''

''இதில் ஒரு விஷயம் என்னன்னா... வாட்ஸ்அப் போன்கால், சாட்டிங்... இப்படி என்ன பண்ணினாலும், ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். அது தெரியாமல், எப்ப பார்த்தாலும், போனை தடவிட்டே இருக்காங்க...''

''மித்து.. வரவர சமுதாயத்தின் மீது உனக்கு அக்கறை அதிகமாயிடுச்சு. இப்டித்தான் கோயமுத்துாரில், 'நடுராத்திரியில் மனைவி பண்ணுன, 'வாட்ஸ்அப்' சாட்டிங்கை படிச்ச கணவர், தன்னோட மகனை கொன்னு, அவரும் துாக்கு போட்டுகிட்டாராம்,''

''இப்படி, பல இடங்களில், 'வாட்ஸ் அப்' சாட்டிங்கினால், பல குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுச்சு... இன்னும் எத்தனை வரப்போகுதோ ஆனா, அதையே நல்லவிதமான 'யூஸ்'பண்றவங்களும் இருக்காங்க...'' என்று சித்ரா ஆதங்கப்பட்டு பேசவும், ஆன்மிக விழா நடக்கும் மண்டபம் வரவும் சரியாக இருந்தது. வண்டியை பார்க் செய்து, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

'சிவனின்றி ஒரு அணுவும் அசையாது. நடப்பதை அவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறான்,' என, சொற்பொழிவாளர் ஒருவர் பேச ஆரம்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X