யானை தாக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Added : ஜூன் 11, 2019

கூடலுார் : யானை தாக்கி, காயம் அடைந்தவரை, தொட்டிலில் படுக்க வைத்து, 2 கி.மீ., துாக்கிச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள நம்பிகுன்னு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 80. வனப்பகுதியில் அமைந்தள்ள இக்கிராமத்தில், நேற்று காலை, வீட்டில் இருந்து முதுகுழி பகுதியை நோக்கி நடந்து சென்றார். அப்போது, இவரை வழிமறித்து, ஒற்றை காட்டு யானை தாக்கியது. சுப்பிரமணி அலறல் கேட்டதும், கிராம மக்கள் ஓடி வந்தனர்.

காட்டு யானையை, கூச்சலிட்டு விரட்டினர்.யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்ட கிராம மக்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, வாகன வசதி இல்லாததால், செய்வதறியாது திணறினர். மேலும், அப்பகுதியில் பெய்த மழையால், பாதைகள் அனைத்தும், சேறும், சகதியுமாக, வெளியூரில் இருந்து வாகனங்கள் வரமுடியாத நிலையில் இருந்தன.இதையடுத்து, கிராம ஆண்கள், போர்வையில் தொட்டில் கட்டி, சுப்பிரமணியை அதில் படுக்க வைத்து, 2 கி.மீ.,யில் இருந்த முதுகுழி வரை துாக்கி சென்றனர்.

அங்கிருந்து, 108 அவசர கால ஆம்புலன்ஸ் உதவியுடன், கூடலுார் மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, கேரள மாநிலம், கல்பட்டா தனியார் மருத்துவமனையில், சுப்பிரமணியை சேர்த்தனர்.வாலிபர் படுகாயம் நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவாலா அட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 21. நேற்று காலை, கேரள மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக, வீட்டிலிருந்து நடந்து வந்துள்ளார்.அப்போது, அந்தோணி கடை அருகே, உலா வந்த காட்டு யானை, தன் தந்தத்தால் கார்த்திகேயனை குத்தி துாக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை, கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X