ரூ.80 ஆயிரத்திற்காக கொத்தடிமை 5 ஆண்டுகள் ஆடு மேய்த்த சிறுவன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.80 ஆயிரத்திற்காக கொத்தடிமை 5 ஆண்டுகள் ஆடு மேய்த்த சிறுவன்

Added : ஜூன் 11, 2019

தஞ்சாவூர் : தஞ்சையில், 80 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, கொத்தடிமையாக, ஐந்து ஆண்டு களாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்கப்பட்டார்.தஞ்சாவூர் அடுத்த, ஏழுப்பட்டியைச் சேர்ந்த, தனபால் - வீரம்மாள் தம்பதிக்கு, நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகன், சந்திரபோஸ், 15. பெற்றோர் இறந்து விட்ட தால், மூத்த சகோதரர் சரவணன், தன் தம்பிகளை வளர்ந்து வந்துள்ளார்.பெற்றோர் இறப்பதற்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த, ரவியிடம், 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

அந்த கடனை அடைக்க, சரவணன், தன் கடைசி தம்பி சந்திரபோசை, ரவியிடம் வேலைக்கு அனுப்பியுள்ளார். ரவி வீட்டில், ஐந்து ஆண்டுகளாக, சந்திரபோஸ், கொத்தடிமையாக, ஒரு வேளை உணவுடன், ஆடு மேய்த்தல் உட்பட, அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார்.சில நாட்களுக்கு முன், கொத்தடிமையாக உள்ள சிறுவன் குறித்து, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.

இதையடுத்து நேற்று, 'சைல்டு லைன்' இயக்குனர், பாத்திமா ராஜ், வல்லம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனை மீட்டு, குழந்தை நல குழுமத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை கொத்தடிமையாக நடத்திய, ரவி மீது, வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X