ஆமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் ஏற்பட்ட கலவரங்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக கருத்து தெரிவித்து ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2002ம் ஆண்டு அயோத்தியில் இருந்து குஜராத் திரும்பிக்கொண்டிருந்த பரிஷத் தொண்டர்கள் பயணம் செய்த ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது, தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து, குஜராத் முழுவதும் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர் கோத்ரா சம்பவத்திற்கு பின் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு கவனித்து வருகிறது. இதில், குஜராத் மாநில உளவுத்துறையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சஞ்சீவ் பட் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அளித்த மனுவில், மோடி தொடர்பு பற்றி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"கடந்த 2002ம் ஆண்டு முதல்வர் மோடி, கோத்ரா சம்பவத்திற்கு பின், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நடத்திய கூட்டத்தில் பங்கேற்றேன். போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய மோடி, "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால், இந்துக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்திற்கு தடை விதிக்காமல் கண்டும் காணாததுபோல் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்' என்று அந்த மனுவில், சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் ஆஜரானபின் தான் ஒரு மனுவை தாக்கல் செய்ததாக மட்டும் அவர் கூறினார். அதில் உள்ள தகவலை, விளக்க முன்வரவில்லை. தற்போது சஞ்சீவ், குஜராத் மாநில ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார். கோத்ரா சம்பவத்திற்கு பின் நடந்த கலவரத்தில் மோடி மற்றும் 61 பேருக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது. அதன் முன் ஆஜரான பின், கடந்த 14ம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். " சிறப்பு விசாரணை குழு விசாரணையை சரியாக நடத்தவில்லை என்ற சந்தேகம் எனக்கு உள்ளது' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவரது மனு, வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. இந்த மனு பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்நிலை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட், முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், "ஒரு மனு தாக்கல் கருத்தை வைத்து எல்லாவற்றையும் மெய்ப்பிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் இது குறித்து முடிவு செய்யட்டும்' என்று பதிலளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE