'தமிழகத்தில், 5,398 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளை துவக்க, மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்' என, மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம், தமிழக அமைச்சர் வேலுமணி, கோரிக்கை மனு அளித்தார்.வறட்சிடில்லியில், மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் கூட்டம், நேற்று நடந்தது.
தமிழகம் சார்பில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், அமைச்சர் வேலுமணி அளித்த மனு:கடந்த, 2016ல், தமிழகம் வறட்சியை சந்தித்தது; 2017லும் போதுமான மழை இல்லை. 2018ல், சராசரி மழை அளவை விட, 24 சதவீதம் குறைவாக பெய்தது.
இதன் காரணமாக, 17 மாவட்டங்கள் மற்றும் ஏழு மாவட்டங்களில் உள்ள, 38 வட்டாரங்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகஅறிவிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து பருவ மழை பொய்த்ததால், குடிநீர் வழங்குவது, பெரும் சவாலாகி உள்ளது. நீராதாரங்கள் வற்றி உள்ளதால், தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது.இதற்கு தீர்வு காண, புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், கைவிடப்பட்ட குவாரிகளில் தேங்கி யுள்ள தண்ணீரை சுத்திகரித்து வழங்குதல், லாரிகளில் குடிநீர் வழங்குதல்போன்ற பணிகளை செய்துவருகிறோம்.
அனுமதி மாநிலம் முழுவதும், மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டி உள்ளது. அதற்கு, 5,398 கோடி ரூபாய் தேவைப்படுகிறது; அதற்கு, அனுமதி அளிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள்; மரக்காணம், விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் 1,601 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 2,000 கோடி ரூபாய் தேவை சிவகங்கை மாவட்டத்தில், எட்டு பேரூராட்சி மற்றும், 2,452 ஊரக குடியிருப்புகளுக்கு, காவிரி நீர் வழங்க, 1,800 கோடி ரூபாய் தேவை
குடிநீர் வாரியம் சார்பில், ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்த, 100 கோடி ரூபாய்; மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை மேம்படுத்த, 50 கோடி ரூபாய்; ஊரக உள்ளாட்சிகளில், வறட்சி பணிகள் மேற்கொள்ள, 448 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் 'துாய்மைப் பாரதம்' திட்டத்தில், உள்ளாட்சிகளில், குப்பையிலிருந்து உரம் தயாரிக்க, 300 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.