சென்னை : 'போரூர் ஏரி புனரமைப்பு பணிகள் தொடர்பான கோப்புகள், என் அலுவலகத்தில் இல்லை' என, திருவள்ளூர் கலெக்டர், மகேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:போரூர் ஏரி அமைந்துள்ள மதுரவாயல் வட்டம் உள்ளிட்ட, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த மாதவரம், அம்பத்துார், திருவொற்றியூர் ஆகிய வட்டங்கள், சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியாக, 2018 ஆக., 16ல் சேர்க்கப்பட்டன. மேற்படி வட்டங்கள் சார்ந்த கோப்புகள் அனைத்தும், அப்போதே, சென்னை மாவட்ட நிர்வாகத்திடம், ஒப்படைக்கப்பட்டு விட்டது.
எனவே, போரூர் ஏரி பணிகள் தொடர்பான எவ்வித கோப்புகளும், இம்மாவட்ட கலெக்டர் அதிகாரத்திற்குட்பட்டு, நிலுவையில் இல்லை.இவ்வாறு, கலெக்டர் மகேஸ்வரி கூறியுள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஏரிகளை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கும், கனிமவளத்துறை பிரிவு இல்லை. எனவே, விரிவாக்கப்பட்ட சென்னைக்குள் உள்ள நீர்நிலைகளை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் அனுமதி பெறப்படுகிறது.
இந்த அடிப்படையில், ஏரியில் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி தரும் அதிகாரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் தான் உள்ளது. எனவே, போரூர் ஏரி புனரமைப்பு தொடர்பான ஆவணங்களும், திருவள்ளூர் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குனரின், 'டேபிளில்' தான் உள்ளன. இந்த தகவலை, சென்னை மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.