ஆந்திர பாணியில் து.மு., பதவி நாடார் அமைப்பு போர்க்கொடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆந்திர பாணியில் து.மு., பதவி நாடார் அமைப்பு போர்க்கொடி

Added : ஜூன் 11, 2019

ஆந்திர மாநில பாணியில், அ.தி.மு.க., அமைச்சரவையில், நாடார் சமுதாயத்திற்கு, துணை முதல்வர் பதவி கேட்டு, அச்சமுதாய அமைப்புகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. அ.தி.மு.க.,வில், ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அது குறித்து விவாதிக்க, சென்னையில், இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது.இந்நிலையில், தமிழக அமைச்சரவையில், போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை, நாடார் சமுதாய அமைப்பு எழுப்பியுள்ளது.

நாடார் மஹாஜன சபை தரப்பில், சென்னையில், நேற்று ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்களில் இடம்பெற்ற விபரம்:தமிழக அரசே, தமிழக அரசே... வன்னியர் அடுத்து, இரண்டாவது பெரும்பான்மையான நாடார் சமுதாயத்திற்கு, மூன்று அமைச்சரும், ஒரு துணை முதல்வரும் வழங்கு.ஒரு ஜாதிக்கு, ஒன்பது அமைச்சர்; ஒரு ஜாதிக்கு, ஆறு அமைச்சர் என்று செயல்படும், தமிழக அரசே, நாடாருக்கு அநீதி இழைக்காதே. சமூக நீதியை நிலைநாட்டு. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அமைச்சரவையில், முக்குலத்தோர் சமுதாயத்திற்கு, ஒன்பது அமைச்சர்கள்; கவுண்டர் சமுதாயத்திற்கு, ஆறு அமைச்சர்கள் இருப்பதால், நாடார் சமுதாயத்திற்கு, மூன்று அமைச்சர்களும், துணை முதல்வர் பதவியும் வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்ற, ஜெகன்மோகன் ரெட்டி, ஜாதிக்கு ஒரு துணை முதல்வர் என, ஐந்து பேரை, து.மு.,க்களாக நியமித்துள்ளார்.அதே பாணியில் பிரதிநிதித்துவும் கேட்டு, தமிழகத்தில், நாடார் சமுதாயம் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து, இன்று நடைபெறவுள்ள, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், பிரச்னை எழுப்பப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X