தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்| Dinamalar

தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்

Added : ஜூன் 11, 2019
 தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்

புதுடில்லி : லோக்சபாவின், தற்காலிக சபாநாயகராக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, ஏழு முறை, எம்.பி.,யான, வீரேந்திர குமார், 65, நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த, 17வது லோக்சபாவுக்காக தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. லோக்சபாவின் முதல் கூட்டம், விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில், 17வது லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக, பா.ஜ.,வின் மூத்த தலைவர், வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, எம்.பி.,க்க ளுக்கு, தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தலையும் அவர் நடத்துவார். லோக்சபாவின் மூத்த உறுப்பினர் தான், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார். தற்போது, மிகவும் மூத்த உறுப்பினரான, சந்தோஷ் குமார் கங்வார், மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக, எட்டாவது முறையாக, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர், மேனகா, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஏழு முறை, எம்.பி.,யான, வீரேந்திர குமார், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த, 1996ல் இருந்து, தொடர்ந்து ஏழு முறை இவர் வெற்றி பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சாகர் தொகுதியில் இருந்து, நான்கு முறையும்; திகம்கர் தொகுதியில் இருந்து தற்போது, மூன்றாவது முறையும், எம்.பி.,யாகி உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X