ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பலி| Dinamalar

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பலி

Added : ஜூன் 11, 2019
 ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பலி

சண்டிகர் : பஞ்சாபில், 125 அடி ஆழமுள்ள, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த, 2 வயது ஆண் குழந்தை, 110 மணி நேர போராட்டத்துக்குப் பின், நேற்று அதிகாலை மீட்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சங்ரூர் மாவட்டத்தில், பகாவன்பூர் என்ற கிராமம் உள்ளது.இங்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த, பதேவீர் சிங், 2, என்ற ஆண் குழந்தை, 6ம் தேதி மாலை, வீட்டுக்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தது.

அப்போது, அங்கிருந்த, 125 அடி ஆழமுள்ள, ஆழ் துளை கிணற்றுக்குள், அந்த குழந்தை தவறி விழுந்து விட்டது.தகவல் அறிந்த பெற்றோரும், கிராமத்தினரும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே, மற்றொரு பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கு முயற்சித்தனர். மீட்பு பணி கடினமாக இருந்தது. ஆழ்துளை கிணற்றின் அகலம், 7 அங்குலம் என்பதால், குழந்தையின் நிலை பற்றிய தகவலும், மீட்பு குழுவினருக்கு தெரியவில்லை.

'டியூப்' வழியாக, கிணற்றுக்குள், ஆக்ஜிஜன் செலுத்தப்பட்டது. இரவு, பகலாக மீட்பு பணி தொடர்ந்தது. ஒரு வழியாக, 110 மணி நேர போராட்டத்துக்கு பின், நேற்று அதிகாலை, குழந்தை மீட்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு உயிர் இருந்ததாக கூறப்பட்டது. சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், மீட்பு குழுவினரும், கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர். இதற்கிடையே, மீட்பு குழுவினர், மிகவும் மெத்தனமாக செயல்பட்டதாகவும், மாநில அரசு நிர்வாகம், மீட்பு பணி விஷயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் கூறி, கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X