மின்வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு

Added : ஜூன் 12, 2019

மதுரை : 'தமிழக மின்வாரிய குடியிருப்புகளில், சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக தங்கியுள்ளோருக்கு நோட்டீஸ் அளித்து, 60 நாட்களில் வெளியேற்ற வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் கருணாமூர்த்தி. இவருக்கு மின்வாரிய ஊழியர்களுக்கான குடியிருப்பில், வீடு ஒதுக்கப்பட்டு, பின், ரத்து செய்யப்பட்டது.அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக வசித்ததாகவும், அதற்கான வாடகைக்கு, தண்டனை அபராதத்தை, சம்பளத்தில் பிடித்தம் செய்ய, அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார்.

அதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில், கருணாமூர்த்தி மனு செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்உத்தரவு:மின் வாரியத்தில், விதிகளை மீறி, குடியிருப்பு ஒதுக்கீடு செய்வது, அதிகரித்துள்ளது. வேண்டியவர்களுக்கு சலுகை காட்டப்படுகிறது. குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், விதிகளை பின்பற்ற வேண்டும்.குடியிருப்பு ஒதுக்கீட்டிற்காக பதிவு செய்து, பல ஊழியர்கள் நீண்ட காலம் காத்திருக்கின்றனர். வீடுகள் ஒதுக்கீட்டில், விதிமீறல்களால், அது கிடைக்காத, பொது ஊழியர்களுக்கு மன உறுதி, திறன் பாதிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 'நாம் அதிகாரிகளால் சமமாக நடத்தப்படுகிறோம்; சலுகைகள், உரிமைகள் பாரபட்சம் இன்றி வழங்கப்படுகிறது' என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.குடியிருப்பு ஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்க மற்றும் தகுதியானவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில், நான்கு வாரங்களில், தனி இணையதளத்தை, தமிழக மின்வாரியம் உருவாக்க வேண்டும்.

அதில், விண்ணப்பித்தவர்களின் பதிவு மூப்பு, தேதி, அவர்களின் பதவி, தகுதி விபரத்தை பராமரிக்க வேண்டும்.ஒரு குழுவை அமைத்து, மின்வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக யாரும் தங்கியுள்ளனரா என விசாரிக்க வேண்டும். அவ்வாறு வசிப்போருக்கு, விளக்கம் கோரி, நோட்டீஸ் அளித்து, 60 நாட்களில் வெளியேற்ற வேண்டும்.சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக, வீடுகள் ஒதுக்கீடு பெற்று வசிப்பது தொடர்பான புகார்கள் மீது, 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி, குடியிருப்பு ஒதுக்கீடு செய்தது தெரியவந்தால், அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை, மின்வாரிய தலைவர் கண்காணிக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X