உறவுகளின் உன்னதம்...

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
உறவுகளின் உன்னதம்...

வாழ்க்கையில் நாம் ஆயிரம் சாதனைகள் படைத்து விட்டோம், குடும்பத்திற்காக உழைப்பதில் குடும்பத்தையே மறந்துவிட்டோம். இன்றைய காலகட்டத்தில் சிந்தித்துப் பார்த்து சீர்துாக்க வேண்டிய விஷயம்தான் உறவுமுறை.

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமா பையன், மாமா பொண்ணு இது போன்ற வார்த்தைகள் எல்லாம் இனிவரும் காலங்களில் யாருடைய காதுகளிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள். இந்த வார்த்தைகள் எல்லாம் அகராதியில் இருந்தும் கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும். இதற்கெல்லாம் காரணம் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரு குழந்தை மட்டுமே போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்.


வாழ்க்கை முறை:

அந்தக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் அனுபவித்த அத்தனை நன்மைகளையும் இழந்து விட்டு பொருளாதாரத்தை மட்டும் மையமாக வைத்துக் கொண்டு நமக்கு நாமே செய்து கொண்ட தீமைதான் இன்றைய வாழ்க்கை முறை. ஒரு காலத்தில் நாம் இருவர், நமக்கு இருவர் என்று திட்டமிட்டோம். அதன்பின்பு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று முடிவெடுத்தோம். இன்று நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். இப்படி இருக்கும் பொழுது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வளரும்.


தாய்மாமன் யார்:

இப்படியே போய்க் கொண்டு இருந்தால் பெண்கள் வயதுக்கு வந்தால் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவதில்லை. திருமணத்தின் போது அரசாணைக்கல் நடுவதற்கு எந்த அண்ணனும் இருக்கப் போவதில்லை. மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்தத் தம்பியும் இருக்கப் போவதில்லை. குழந்தைக்கு மொட்டை போட முடிவெடுத்தால் யார் மடியில் உட்காரவைத்து முடி எடுப்பதென்று தெரியாது. அன்றைய காலகட்டத்தில் கட்டிக் கொடுத்த இடத்தில் பெண்ணுக்கு ஒரு பிரச்னை என்றால் அண்ணணும் தம்பியும் பறந்து செல்வார்கள். பணிய வேண்டிய இடத்தில் பணிந்தும், பாய வேண்டிய இடத்தில் பாய்ந்தும் குடும்பத்தின் குத்து விளக்கான பெண்ணை மகிழ்விப்பார்கள்.


ஆறுதல் கூற ஆளில்லை:

தங்கைக்கு திருமணத்தேதி குறித்த பின்பு தந்தையின் சுமைகளை இறக்கி வைக்க தோள் கொடுத்து தாங்கும் கூட்டம்தான் சகோதரர்கள். ஆனால் இன்று ஒவ்வொரு பெண்ணும் சொந்த பந்தம் ஏதுமின்றி, ஆறுதல் கூற ஆளின்றி தவிக்கிறார்கள். நல்ல நிகழ்வுகளாக இருந்தாலும், துக்க நிகழ்வுகளாக இருந்தாலும் அவற்றிற்காக நாம் ஒதுக்கும் நேரம் வெறும் அரைநாள் தான், அதற்கு பின்னால் நீ யாரோ? நான் யாரோ? என்று கூறிவிட்டு இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக இயந்திரத்தனமாய் வாழ்கிறது ஒரு கூட்டம்.


அண்ணன், தம்பிகள்:

அந்த நாளில் ஒவ்வொரு ஆணுக்கும் கஷ்டம் என்று வந்தால் அதில் பங்கு கொள்வதற்கும், கை கொடுத்து காப்பாற்றுவதற்கும், காலுான்றி நிற்பதற்கும் காரணமாக இருந்தவர்கள்தான் அண்ணன், தம்பிகள். ஆனால் இனிமேல் அப்படியெல்லாம் ஒரு உறவுக்கு வழியுமில்லை, வாய்ப்பும் இல்லை. ஒரு குழந்தைக்கு இருக்கும் ஒரே ஒரு உறவு அப்பா, அம்மா மட்டும்தான், அந்த ஒரு குழந்தையையும் படிக்கும் காலத்தில் விடுதியில் சேர்த்து இயந்திரமாக்குகிறேம். தந்தையும், தாயும் வேலைக்குச் சென்றல் கூட எந்த ஒரு விலங்கும், பறவையும் தனது குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச் சென்றதில்லை. அதன் பின்பு அந்தப் பிள்ளை வளர்ந்து நம்மை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டு அந்நியச் செலாவணியை சம்பாதிக்க ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பறக்கிறார்கள். குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், மண்டியிட்டுக் காத்திருப்பதற்கும், சமையல் செய்வதற்கும், நோயாளியை பராமரிப்பதற்கும் ஆள்மாற்றி விடுவதற்கும், உணவு பரிமாறவும், கடைத்தெருவுக்கு சென்று வருவதற்கும் என்று ஓடி ஓடி பாசத்தை பகிர்ந்து கொண்டது அந்த காலம்.


பாசம் இருக்குமா:

இன்று மருத்துவமனையில் சேர்த்த நோயாளியுடன் அவரது துணை இருந்தாலே உலக அதிசயம். அவர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதே? அவர்கள் போகாவிட்டால் அலுவலகத்தை யார் பார்த்துக் கொள்வார்கள். பணத்திற்காக பணி செய்பவர்கள் இருக்கலாம், அதில் பாசம் இருக்குமா? பள்ளிக்கு செல்லும் பெற்றோர், ஆசிரியரிடம் தன் குழந்தையை தண்டிப்பதற்கு உரிமை அளித்தனர். அதனால் குழந்தைகள் கண்டிப்புடன் படித்தனர்; அதனால் மேன்மை பெற்றனர். ஆனால் இன்று நானே மகனிடம் கேள்வி கேட்பதில்லை; நீங்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று ஆசிரியரிடம் கேட்கும் பெற்றோர் விளைவை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிறுவயதில் சண்டை போட்டுக் கொள்ளும் குழந்தைகள் தான் வளர்ந்து விட்ட பிறகு பெற்றோருக்கு ஏதாவது என்றால் ஓடிவந்து பார்ப்பார்கள். கணவன், குடும்பம், குழந்தை என்று அத்தனை விஷயங்கள் இருந்தாலும் பெற்றவர்களுக்காக அத்தனையும் விட்டுவிட்டு முதலில் வந்து நிற்பார்கள். சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று தனது மகனுக்கு தங்கையின் மகளையும், தனது மகளுக்கு மனைவியின் அண்ணன் மகனையும் மணம் முடித்து அழகு பார்த்த கூட்டம் வாழ்ந்தது அந்தக் காலம்.


பெயர் தெரியாத சொந்தம்:

ஆனால் இன்று சொந்தக்காரர்களின் பெயர் தெரியாது, அவர்களது உறவுமுறை தெரியாது, அவர்கள் முக்கியத்துவமும் தெரியாது. அடுத்தவர்கள் ஆசைகளை விட நம்முடைய பேராசை மேலோங்குகிறது. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் நாலுகிரவுண்டு நிலத்தில் கடன் வாங்கி வீடுகட்டி வாங்கிய கடனுக்காக வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு அதுக்கு பின்னால், பிள்ளையை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டின் மேற்கூரையை வேடிக்கை பார்ப்பதற்காகவா இத்தனை பாடுபட்டோம் என நினைப்போம்.


யார் அனாதை:

ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பாருங்கள். இந்த உலகம் பணமில்லாத ஒருவனை அனாதை என்று சொல்லுவதில்லை. ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்து விடாதீர்கள். வயதான காலத்தில் நாதியற்று போகவா பாடுபட்டு ஓடியோடி உழைக்கிறீர்கள். உறவுகளின் உன்னதத்தை உணருங்கள், உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். ஆண்டிராய்டு அலைபேசியில் ஆங்கிரி பேர்டு விளையாடுவதை புறந்தள்ளச் சொல்லி விடுமுறை நாளில் உறவினரோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, விளையாடி, ஓய்வெடுத்து, கதைபேசி, களிப்படையச் சொல்லுங்கள்.

--எஸ்.ராஜசேகரன், தலைமை ஆசிரியர், இந்து மேல்நிலைப்பள்ளி வத்திராயிருப்பு

94429 84083

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூன்-201919:59:46 IST Report Abuse
RajanRajan கட்டுக்கோப்பான கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு நாம் என்று திரும்புவோம்? பணம் அத்தனை உறவுகளையும் முழுங்கி விட்டதே என்று எண்ண தோன்றுகிறது. கூட்டுக்குடும்பம் சமுதாயத்தின் பலம் என்பதை மக்கள் உணர்ந்து செயல் படும் கால கட்டத்தில் நாம் உள்ளோம். நம் சந்ததிகளுக்கு பணத்தை விட்டு செல்கிறோமா பாரம்பரியத்தை கொடுத்து செல்கிறோமா என்பது சிந்திக்க வேண்டிய ஓன்று. வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
Baskaran - Thanjavur,இந்தியா
12-ஜூன்-201907:52:38 IST Report Abuse
Baskaran அருமையான கட்டுரை. மனதிற்கு உருவம் கிடையாது. மூளைக்கு உருவம் உண்டு. மனதிற்கு லாஜிக் தெரியாது. இலாபம் நஷ்டம் பார்த்து பழகாது. அன்பும் பாசம் நேசம் போன்றவைதான் அதன் அடித்தளம். ஆனால், மூளைக்கு இதெல்லாம் தெரியாது. மனதின் பேச்சைக்கேட்டு நடந்த நாம் மூளைக்கு முக்கியத்துவம் கொடுத்ததின் விளைவுதான் உறவறுந்த இன்றைய நிலை. மனநிலை பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X