மாணவர்களுக்கான ஆழ்கடல் பயிற்சி திமிங்கல சுறா வந்ததால் பரபரப்பு| Dinamalar

மாணவர்களுக்கான ஆழ்கடல் பயிற்சி திமிங்கல சுறா வந்ததால் பரபரப்பு

Added : ஜூன் 12, 2019
 மாணவர்களுக்கான ஆழ்கடல் பயிற்சி திமிங்கல சுறா வந்ததால் பரபரப்பு

புதுச்சேரி:புதுச்சேரி கடலில் மாணவர்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென வந்த திமிங்கல சுறாவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கடல் பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினந்தோறும் காலை வேளையில் மாணவர்களை, இந்த நிறுவன பயிற்சியாளர்கள் ஆழ்கடலுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கின்றனர். நேற்று காலை 11:00 மணிக்கு பயிற்சிக்கு மாணவர்களை, பயிற்சியாளர் அரவிந்தன் ஆழ்கடலுக்கு படகில் அழைத்து சென்றார்.அப்போது, அங்கு வந்த பெரிய அளவிலான திமிங்கல சுறாவை கண்டு, மாணவர்கள் அச்சப்பட்டு அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், பயிற்சியாளர் அரவிந்தன், மாணவர்களை சமாதானப்படுத்தி, அந்த திமிங்கல சுறாவை ஐந்து நிமிடங்கள் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த சுறா மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றது.
இதுபற்றி பயிற்சியாளர் அரவிந்தன் கூறியதாவது,இந்த திமிங்கல சுறா மீன்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கி பழகும் தன்மை கொண்டது. அதன் அருகில் சென்றால் கூட யாருக்கும், தீங்கு விளைவிக்காத விலங்கினமாகும். இப்போது எங்கள் படகிற்கு அருகே மேல் பகுதியில் வந்து சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த மீனின் குணநலன் பற்றி அறிந்திருந்ததால், நான் அதன் அருகிலேயே சென்று வீடியோ எடுத்தேன் என்றார்.மாணவர்களின் பயிற்சியின் போது ஆழ்கடலில் திடீரென திமிங்கல சுறா மீன் வந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X