புதுச்சேரி:புதுச்சேரியில் நேற்று வெயில் 104 டிகிரியை தொட்டது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர்.புதுச்சேரியில் கடந்த மே மாதம் 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கியது. அப்போது, வெயில் 100 டிகிரியை தொட்டதால், மக்கள் பகலில் வெளியே வரவே அஞ்சினர். இந்நிலையில் கடந்த 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்ததால், வெயிலின் தாக்கம் குறையும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், அதற்கு மாறாக கத்திரி வெயில் முடிந்த பிறகு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதியத்திற்கு பிறகு, சாலைகளில் அனல் காற்று வீசி வருகிறது. நேற்று புதுச்சேரியில் வெயிலின் அளவு 104 டிகிரியாக பதிவாகியது.இதனால், சாலைகளில் அனல் காற்று வீசியது, நெடுஞ்சாலைகளில் கானல் நீர் தோன்றியது.அனல் காற்று வீசியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், நெருப்பு குகைக்குள் வாகனங்களை ஓட்டிச் செல்வதை போல், உணர்ந்தனர்.இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் திருவள்ளூவர் மாவட்டம் முதல் திருச்சிவரை உள் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் புதுச்சேரியில் ஏற்படும்.தற்போது மேற்கு திசையில் இருந்து, அதாவது நிலப்பகுதி காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெப்ப தாக்கம் இரு நாட்கள் வரை நீடிக்கும். கிழக்கு திசையில் இருந்து கடல் காற்று வீச ஆரம்பித்தால், வெப்பத்தின் அளவு குறைந்து சாதாரண நிலை ஏற்படும். கிழக்கு திசை கடல் காற்று ஓரிரு நாட்களில் வீச ஆரம்பிக்கும். அதுவரை அனல் காற்று வீச கூடும் என தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE