ஆமதாபாத்:அரபிக் கடலில் உருவாகியுள்ள, 'வாயு' புயல், குஜராத் மாநிலத்தில், நாளை கரையைக் கடக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழைக் காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில், வாயு புயல் உருவாகியுள்ளது. இது, நாளை காலையில், குஜராத்தின் வெரவால் பகுதியில் கரையைக் கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, குஜராத் முதல்வர், விஜய் ரூபானி கூறியதாவது:வாயு புயல், குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவாவுக்கு இடையே, வெரவாலில், 13ம் தேதி கரையைக் கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எச்சரிக்கை
அந்த நேரத்தில், மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், பல இடங்களில், பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளனர். அதையடுத்து, மாநிலத்தின் அனைத்து கடலோரப் பகுதிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதியில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்காக, ராணுவம், என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல்படை வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE