ஈஷா பசுமை கரங்கள் திட்டம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2019-ம் ஆண்டில் 50 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) நடைபெற உள்ளன.
ஈஷா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் திட்டமான ஈஷா பசுமை கரங்கள் திட்டமானது மரங்கள் நடுவதன் மூலம் தமிழகத்தின் பசுமை பரப்பை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகளின் மூலமாக இதுவரை 3.3 கோடி மரக்கன்றுகளை உருவாக்கி 20 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களின் பங்களிப்போடு தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்க வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2019-ம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வனத் துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பல முக்கியத் துறைகளைச் சேர்ந்தோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
2006-ம் ஆண்டு, மூன்றே நாளில் 2.5 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனையில் இத்திட்டம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார் ); (Indira Gandhi Pariyavaran Puraskar) விருது பசுமைக்கரங்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.
மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் நலத் துறையால் வழங்கப்பட்ட 2010-ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் (“Environmental Award - 2010”) விருதையும் பசுமைக்கரங்கள் திட்டம் வென்றுள்ளது. தமிழகம் முழுவதும், கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் பசுமைப் பரப்பை அதிகப்படுத்துவதற்காக முழு முனைப்புடன் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பசுமைப் பள்ளி இயக்கம் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் மூலமாகவே மரக்கன்றுகள் உருவாக்கி நட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பசுமைக்கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமான ஈஷா வேளாண்காடுகள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களை நேரடியாகப் பார்வையிட்டு அந்த மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்த்தெடுத்தல், மரக்கன்றுகள் நடவு மற்றும் முறையான பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மற்றொரு அங்கமான ஈஷா விவசாய இயக்கம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, மண்ணின் வளத்தையும் பாதுகாக்க செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்களுடன் போன்றவற்றுடன் இணைந்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் ஈடுபட்டு வருகிறது.