ஈஷா பசுமை கரங்கள் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) மிகச் சிறப்பாக தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரை 3.5 கோடி மரக் கன்றுகள் உருவாக்கப்பட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்களிப்புடன் நடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2019-ம் ஆண்டில் 50 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை, மதுரை, திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, வேலூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கன்றுகள் நடும் விழாக்கள் இன்று நடைபெற்றன.

மஹாராஷ்ட்ரா மாநில அரசு சார்பில் மும்பையில் இன்று நடந்த உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் சத்குரு பேசும் போது, “உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மஹாராஷ்ட்ரா அரசுடன் இணைந்து வகாரி நதிக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை துவக்கிறோம். இந்த மைல்கல் முயற்சியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும், அஹிம்சா விஷ்வ பாரதி அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
புதுச்சேரியில் ஜூன் 3-ம் தேதி நடந்த சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி, சபாநாயகர் திரு.சிவகொழுந்து ஆகியோர் பங்கேற்றனர்.
கோவையில் நடந்த விழிப்புணர்வு மாரத்தானில் ஈஷா தன்னார்வலர்கள், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், ஆர்.ஏ.எஃப் படை வீரர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், கோவை தடகள சங்கத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவை கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஷ்ரவந்த் குமார் தொடங்கி வைத்தார்.

இதேபோல், காஞ்சிபுரம், திருநெல்வேலி, சேலம், சிவகங்கை மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர். பிற மாவட்டங்களில் காவல் துறை, வனத் துறை மற்றும் கல்வி துறை உயர் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
பள்ளி குழந்தைகளுக்காக ஈஷா பசுமை பள்ளி இயக்கம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக ஈஷா விவசாய இயக்கம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா வேளாண் காடுகள் திட்டம் என பல வழிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக ஈஷா அறக்கட்டளை தீவிரமாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈஷா பசுமை கரங்கள் திட்டம் பெற்ற விருதுகள்:
2006-ம் ஆண்டு, மூன்றே நாளில் 2.5 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனையில் இத்திட்டம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார் (Indira Gandhi Pariyavaran Puraskar) விருது பசுமைக்கரங்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் நலத் துறையால் வழங்கப்பட்ட 2010-ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் (“Environmental Award - 2010”) விருதையும் பசுமைக்கரங்கள் திட்டம் வென்றுள்ளது.
தமிழகம் முழுவதும், கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் பசுமைப் பரப்பை அதிகப்படுத்துவதற்காக முழு முனைப்புடன் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஊடக தொடர்புக்கு: 9043597080 / 9487895910