பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: முதல்வரும்,துணை முதல்வரும், அன்போடு,அரவணைப்போடு இணைந்து செயல்படுகின்றனர்.ஒரு சில கருத்துகளை கூறி, எதிரிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
டவுட் தனபாலு:எதுக்குங்க இப்படிச் சுத்திவளைச்சு,அறிவுரை சொல்றீங்க... 'ஜெ.,இருந்த இடத்தில்,ஒரு பெண் தான் வரணும்...அதன்படி, பொதுச்செயலர் பதவியை, சசிகலாவுக்கு தரணும்... கட்சித் தலைமையே, ஆட்சிக்கும் தலைமை தாங்கணும்; அதனால், சசிகலாவை முதல்வராக்கணும்னு, அன்று ஆரம்பித்தது தான், இன்று இவ்வளவு பெரிய பிரச்னைகளுக்கு காரணம்... அதனால், யாரும், எதுவும், கருத்து சொல்லாதீங்க'ன்னு, வெளிப்படையாக சொன்னால், உங்க கட்சி ஆட்களுக்கு, இன்னும், 'டவுட்' இல்லாமப் புரியுமே...!
***
மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன்: விவசாயம், வேலைவாய்ப்பு,வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு தான், மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
டவுட் தனபாலு: அதெல்லாம் சரி...வரிகளை உயர்த்தாமல் தானே, இதை எல்லாம் நிறைவேற்றப் போறீங்க...ஏன் இந்த, 'டவுட்'னா, 'காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைப் பார்த்தால், அவற்றை நிறைவேற்ற, மக்கள் முதுகில் கூடுதல் வரிகளை விதிக்கும் திட்டம் உள்ளதுபோல் தெரிகிறது'ன்னு, பிரதமர் மோடி பிரசாரம் செய்தாரே... அதனால் தான் கேட்டோம்...!
***
பத்திரிகை செய்தி: 'வறட்சி, குடிநீர் பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம், சட்டசபை கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டவுட் தனபாலு: சட்டசபை கூட்டத்தொடரையே, நீங்க வெறும் சம்பிரதாயமாகத்தான் பார்க்குறீங்க... அதனால் என்ன பயன்னு, கேள்வி கேட்குறீங்க...இப்போ, அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தினால் மட்டும், மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி விடுமா... உங்களின் இந்தக் கோரிக்கைக்குப் பின், பெருசா ஏதோ,'பிளான்' இருக்கோ என்ற, 'டவுட்'தான் வருது...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE