பொது செய்தி

தமிழ்நாடு

'விஷயம் எல்லை மீறி போயிடுச்சு...!' பள்ளிக்கரணை ஏரி மீட்பில் அதிகாரிகள் புலம்பல்

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'விஷயம் எல்லை மீறி போயிடுச்சு...!'  பள்ளிக்கரணை ஏரி மீட்பில் அதிகாரிகள் புலம்பல்

-பள்ளிக்கரணை சுற்றுப் பகுதிகளின் நீர் ஆதாரமாக விளங்கிய பெரிய ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, பெரும்பகுதி மாயமாகி விட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற, ராணுவத்தின் உதவியை, பொதுப்பணித் துறை எதிர்பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.''பள்ளிக்கரணை பெரிய ஏரியை பொறுத்தவரை, விஷயம் எல்லை மீறி போயிடுச்சு... இதுக்கு மேல, சொல்றதுக்கு எதுவும் இல்லை; புரிஞ்சுக்கோங்க,'' என்றார், காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், தியாகராஜன். அவரது பேச்சு, இதற்கு மேல், எதுவும் பேச முடியாத வகையில், அவருக்கு மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்தம் உள்ளதை காட்டுகிறது.'

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசார் ஒத்துழைக்கவில்லை என்றால், ராணுவத்தையும் அனுப்ப நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. எனவே, எதைப் பற்றியும் கவலைப்படாமல், பள்ளிக்கரணை ஏரி மீட்பு நடவடிக்கையை, பொதுப்பணித் துறை துவக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.காணாமல் போனது ஏரி!காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக்கரணையில் உள்ள பெரிய ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு உடையதாக இருந்தது. இந்த ஏரியில் தேக்கப்படும் நீர், சுற்றுப்பகுதி விவசாய நிலங்களின் பாசனம் மற்றும் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

நகரமயமாக்கல் அதிகரித்ததன் விளைவாக, இந்த ஏரியை ஒட்டியிருந்த விவசாய நிலங்கள் அனைத்தும், வீட்டு மனைகளாக உருமாறின.இதன் தொடச்சியாக, அங்கு வீடுகள் கட்டப்பட்டன. நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததால், உள்ளூர் அரசியல்வாதிகள், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளையும், கூறு போட்டு விற்க ஆரம்பித்தனர். குறைந்த விலைக்கு நிலம் கிடைத்ததால், பொதுமக்களும் அவற்றை போட்டி போட்டு வாங்கினர். ஒரு கட்டத்தில், ஏரியின் கரையை உடைத்தும், 'பிளாட்' போட்டு விற்பனை நடந்தது.மின் வாரியமும் தடையின்றி மின் இணைப்பு வழங்கியது; ஊராட்சி நிர்வாகமும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், உடனுக்குடன் செய்து கொடுத்தது.
இவற்றை எல்லாம் தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஏரிக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்து, ஏரி கபளீகரமாக உதவி செய்துள்ளனர்.ஒரு கட்டத்தில், 'நாங்களும் வேலை செய்கிறோம்' என, கணக்கு காட்ட, வீடுகளை காலி செய்யும்படி, அவ்வப்போது எச்சரிக்கை, 'நோட்டீஸ்' கொடுத்ததோடு சரி; நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால், 150 ஏக்கராக இருந்த ஏரி, 30 ஆண்டுகளில், வெறும், 5 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டது.இதேநிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில், ஏரி இருந்த சுவடே தெரியாமல், அழிந்து போகும் அபாயம் உள்ளது. முடிந்த அளவு ஏரியை மீட்டு, நீரை முறையாக சேமித்தால், பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்யலாம்; நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தலாம்.கடும் வறட்சியால், தாகம் தீர்க்கும் தண்ணீருக்காக, மக்கள் தவம் கிடக்கின்றனர்; இப்போது தான், ஏரியின் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.மேடவாக்கம் பெரிய ஏரியில் இருந்து சித்தேரிக்கும், அங்கிருந்து பள்ளிக்கரணை பெரிய ஏரிக்கும், 40 அடி அகலத்திற்கு அதிகமான போக்கு கால்வாய் இருந்தது. ஏரியை ஆக்கிரமித்தவர்களே, அவற்றையும் ஆக்கிரமித்து விற்பனை செய்தனர்.

இதனால், ஏரியின் போக்கு கால்வாய் இருந்த சுவடே தெரியவில்லை. பழைய ஆவணங்கள் அடிப்படையில், போக்கு கால்வாய்களை முதலில் கண்டறிந்து, அவற்றையும் மீட்க வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.ஆனால், ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டதால், ஏரியை மீட்பது குறித்து, எந்த கவலையும் இல்லாமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, மேலும் பல ஏரிகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
சிறப்பு பிரிவு என்னாச்சு?'நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க, தலைமை செயலர் தலைமையில், சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். மாவட்ட அளவில், கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை, சிறப்பு குழுவினர், ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட குழுக்களின் நடவடிக்கைகளை, அப்போது ஆய்வு செய்ய வேண்டும்' என, மே மாதம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இந்த குழு, மீண்டும் ஆலோசனை நடத்தி, பள்ளிக்கரணை பெரிய ஏரி மீட்பு நடவடிக்கைக்கு, அனுமதி வழங்க வேண்டும்.பிரச்னைக்கு பிள்ளையார் சுழிஏரிகளில் தொடர் ஆக்கிரமிப்புகள் உருவாக, மின் வாரியம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மின் இணைப்பு கேட்கும் போது, உடனடியாக வழங்கப்படுகிறது.

இதற்காக, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, 'டிபாசிட்' கட்டணம் மட்டுமின்றி, மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு லஞ்சமும் வழங்கப்படுகிறது.'நிபந்தனையின் அடிப்படையில் இணைப்பு வழங்கப்படுகிறது; எந்த நேரத்திலும், அது துண்டிக்கப்படலாம்' என்று கூறி, இணைப்பு வழங்குவதை, மின் வாரியத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர்.ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் நேரத்திலும், இணைப்பை அவர்கள் துண்டிக்க முன்வருவதில்லை. மின் இணைப்பை துண்டிப்பதற்காக, பொதுப்பணித் துறை அதிகாரிகள், பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இனி வரும் காலங்களில், ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதை, வாரியம் நிறுத்தினால், சிக்கல்கள் தீரும்
- நமது நிருபர்- குழு.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூன்-201903:10:16 IST Report Abuse
meenakshisundaram இதில் உண்மை என்னவென்றால் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் (வழக்கமாக RTO ,தாலுகா .பத்திரப்பதிவு அடக்கம்) தங்கள் பாக்கெட்டுகலை நிரப்புவதையே தொழில் ஆக கொண்டுள்ளார்கள்,அவர்களுக்கு எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் ,இவனிடம் கேட்பது என்றே எண்ணமே தவிர மக்களின் நலனில் சிறுதும் அக்கறை இல்லை.உடனே Chennai அலுவலகங்களில் வேலை பார்க்கும் அனைத்து எதிரிகளையும் அவர்களின் கீழ் வேலை பார்க்கும் அலுவலர்களையும் (அநேக அலுவலகங்களில் அதிகாரிகள் தங்களின் கீழ் வேலையிலிருக்கும் நபர்களிடமே லஞ்சதொகையை கொடுக்க சொல்வது கண்கூடு)கூண்டோடு நெல்லை குமரி ஊர்களுக்கு தூக்கி அடித்து அங்கிருந்து மற்றவர்களை சென்னைக்கு மாற்றினால் பசங்க கொஞ்சம் அடங்குவாங்க கொஞ்ச காலத்துக்காகவாது ,இந்த ரீதியில் அரசு என்ன வேண்டும் ,ஆமா இந்த ஜாக்ட்டி,NGO சங்கமெல்லாம் எங்கே போச்சு ?கையிலே கடப்பாரையை கொடுத்து தோண்ட சொல்லுங்கதண்ணி கிடைக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூன்-201912:41:12 IST Report Abuse
Bhaskaran இன்னும் கொஞ்சநாட்களில் சென்னையில் மயிலாப்பூர் சைதை திருவொற்றியூர் குளங்கள் தவிர வேறு நீர்நிலைகள் இருக்காது எல்லாம் கழகங்களின் புண்ணியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X