தந்தை என்னும் தலைவன்| Dinamalar

தந்தை என்னும் தலைவன்

Added : ஜூன் 13, 2019
Share
 தந்தை என்னும் தலைவன்

கல் தோன்றி, மண் தோன்றி, பின் ஒருசெல் உயிரி தோன்றி, பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்பது அறிவியல் கூற்று. உருவங்கள் உருவாக பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாடு உள்ளது, ஆனால் உணர்வுகளுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட முடியாதது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தாத்தா, பாட்டி என ஒவ்வொரு உறவும், உறவுகளுக்கான உணர்வுகளும் தான் மனித வாழ்வின் அடித்தளம். தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைந்து போன சொந்தங்களின் சந்தோஷங்கள் பல இருந்தாலும், அப்பா எனும் உறவு குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம். கருவை உருவாக்கும் அன்னையின் பந்தம் ரத்தத்தால் இணைக்கப்படும். அப்பாவின் பந்தம் உணர்வுகளால் உணரப்படும். தந்தை என்ற உறவு சரியாக அமைந்தால் ஒரு மனிதனின் தலையெழுத்தே மாறிப்போகும்.


முதல் கதாநாயகன்:

வளரும் ஒவ்வொரு குழந்தையின் முதல் கதாநாயகன் தனது தந்தையாகத்தான் இருக்க முடியும். பல தந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்கள், சில தந்தைகள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாகிப் போகிறார்கள். ஜான்சி மேக்ஸ்வெல் என்ற எழுத்தாளர் தலைமைப்பண்பை வளர்த்தெடுக்கும் தன்னுடைய புத்தகத்தில் ஒரு தந்தைதான் தலைமைத்துவத்தின் முன்னோடி என்பதை தான் படித்த கவிதை மூலம் எடுத்துரைக்கிறார்.

“என்னைப் பின் தொடரும் அந்த சிறுவன்” என்னும் தலைப்பின்கீழ் உள்ள கவிதை அது. நான் கவனத்துடன் இருக்க விரும்புகிறேன், ஒரு சிறுவன் என்னைப் பின் தொடர்கிறான். நெறி தவறிப் போகும் துணிச்சல் எனக்கு இல்லை. அவனும் அதே வழியைப் பின் தொடர்வான் என்ற பயம்தான் காரணம், அவன் கண்களில் இருந்து நான் ஒரு போதும் தப்ப முடியாது. நான் எதைச் செய்வதை அவன் பார்த்தாலும் அவனும் அதையே முயற்சிக்கிறான், என்னைப் போல் ஆகப்போவதாக கூறுகிறான் என்னைப் பின்தொடரும் அந்த சிறுவன். கோடைச் சூரியனையும், குளிர்கால பனியையும் சமாளித்துக் கொண்டு போகும்போது நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும். நான் வருங்காலத்திற்காக இப்போது கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறேன் என்னைப் பின் தொடரும் அந்த சிறுவனுக்காக!


அதிசயிக்க வைத்தவர்:

தன்னுடைய மகன் சாதனையாளராக வேண்டும் என்று அறிவுரைகளை அள்ளித்தரும் தந்தையை விட தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும் சாதனையாக மாற்றி வாழ்ந்திடும் தந்தை சிறந்த தலைவனாகிறான். கிம் பீக் (Kim Peak) என்ற அறிஞர் தன்னுடைய ஞாபகத்திறனால் இந்த உலகையே அதிசயிக்கச் செய்தவர். ரெயின் மேன் (Rain Man) என்ற படம் இவரின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதே. ஒரு நாளைக்கு 8 புத்தகங்களை படிக்கும் திறன் கொண்ட இவர், ஒரே சமயத்தில் தன் இரண்டு கண்களால் இரு வேறு பக்கங்களைப் படிக்கும் ஆற்றல் கொண்டவர். தான் படித்த ஒவ்வொரு புத்தகத்தின் வார்த்தையையும் தெளிவாக நினைவு கூறும் ஆற்றல் கொண்டவர். அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்தின் பின் கோடும், ஒவ்வொரு தெருவின் பெயரும், கிட்டத்தட்ட 1000 பாடல்களின் வரிகளும், இவருக்கு அத்துப்படி. இப்படி இவரது நினைவுத்திறனுக்கு சான்றாகும் நிகழ்வுகள் ஏராளம்.

ஆனால் பிறக்கும் போது இவருடைய மூளையின் செரிபெல்லம் என்னும் பகுதி சேதாரமாகியிருந்தது. அவரது வலது மூளையும், இடது மூளையும் தொடர்பில்லாமல் இருந்தது. அந்தக் குழந்தையின் மருத்துவ அறிக்கைகளைப் படித்த நரம்பியல் மருத்துவர் இந்தக் குழந்தையை மறந்து விடுங்கள், ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். இந்தக் குழந்தையால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் அவரது தந்தை ப்ரான் அந்த வார்த்தைகளை ஏற்கவில்லை. தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து அவரை 30 வருடங்கள் பேணிக்காத்து அவரை சாதனையாளராக மாற்றினார்.


மெழுகாய் உருகி :

உலகை வியக்க வைத்த கீம் என்ற அந்த 'நினைவுலகின் அரசனுக்கு' பல் துலக்குவது, குளிப்பது போன்ற தன் அன்றாட தேவைகளுக்கு தன்னுடைய தந்தையின் உதவி தேவைப்பட்டது. ஒருமுறை ப்ரானிடம் ஒரு நிருபர் கிம்மை வளர்ப்பதில் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, பதிலாக ஒரு நாளில் 30 மணி நேரமும், ஒரு வாரத்தில் 10 நாட்களும் உழைத்த ஒரு தந்தையின் நிகரில்லா அன்பு தான், ஒரு மனிதனால் எத்தனை விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்று உலகம் அறியச் செய்துள்ளது என்றார்.

தன் பிள்ளைகளுக்காக, அவர்களின் மேன்மைக்காக மெழுகாய் உருகி ஒளி தரும் தந்தையரின் எழுதப்பட்ட சரித்திரங்களும், அறியப்படாத சரித்திரங்களும் எண்ணற்றவை. இறைவனுக்கு முன் வைத்து துதிக்கப்படும் தாய், தந்தையர் மீது கொண்ட பக்தியால் இறைநிலை அடைந்தவர்களுக்கென்று இந்திய சரித்திரத்தில் தனி இடம் உண்டு.


தந்தை சொல்:

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இன்முகத்துடன் வனவாசம் சென்ற ராமனும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற பிரம்மச்சரிய வாழ்வு மேற்கொண்ட பீஷ்மரும் தந்தை மீது கொண்ட பக்தியின் உச்சத்தைத் தொட்டவர்கள். தன் உழைப்பாலும், உணர்வாலும் அன்பென்னும் குணத்தாலும் தன்பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தோழனாய், தலைவனாய்த் திகழும் தந்தைக்கென்று சரித்திரத்தில் என்றும் ஓர் அத்தியாயம் உண்டு. பணத்தை மட்டுமே அள்ளித் தந்து அறிவுரைகள் சொல்லி, தொலைநுட்பத்திலும், தொலைந்து போகும் தந்தைகளின் அத்தியாயம் வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துக்களுடன் மட்டுமே அழிந்து போகும்.

தன் பிள்ளைகளுடன் தோழமையாய் பழகி, குடும்பத்தின் கனவுகளுக்காக தன் கனவுகளுக்கு கல்லறையை இன்முகத்துடன் அமைத்துக்கொள்ளும் தந்தை அமையப் பெற்ற ஒவ்வொரு பிள்ளையும் வாழும் வரம் பெற்ற பிள்ளைகள். ஆனால் அந்தத் தந்தையின் கண்களில் கண்ணீருக்கும், மனதில் வருத்தத்திற்கும் காரணமான பிள்ளைகள் தன்னைக் கைகளில் ஏந்திய இறைவனைத் தொலைத்துவிட்டு ஆலயத்தில் இறைவனைத் தேடுவதில் பயனில்லை. அன்னையிட்ட அமுது உடலுக்கு உணவு. தந்தையிட்ட தைரியம் மனதுக்கு அமுது. அன்னை கருவில் சுமந்திட்ட குழந்தையை கருத்தில் தினமும் சுமந்து வாழ்ந்திடும் அனைத்து தந்தையினருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

லாவண்ய சோபனா திருநாவுக்கரசு, எழுத்தாளர், சென்னை
shobana.thiruna@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X