பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் தீர்த்தங்கள் வறண்டன; கிடப்பில் இரண்டாம் பிரகார பணிகள்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 கோயில் தீர்த்தங்கள் வறண்டன; கிடப்பில் இரண்டாம் பிரகார பணிகள்

ராமேஸ்வரம்:மழையின்றி வறட்சியால் ராமேஸ்வரம் கோயிலில்தீர்த்த கிணறுகள் வறண்ட நிலையில், கோயிலில்முழுமைபெறாமல் கிடப்பில் போடப்பட்ட இரண்டாம் பிரகாரப் பணிகளை கண்டு பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மட்டுமே தீர்த்த சிவ தலமாக உள்ளதால், இங்குள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இக்கோயில் தீர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி மகிமை உண்டு. இதனால் உலகில் உள்ள இந்துக்கள் இக்கோயிலில் புனித நீராடுவதை பாக்கியமாக கருதுவார்கள்.ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இக்கோயிலில், ராவணனை வதம் செய்ததால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் நீங்கிட, ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை சிவலிங்கம் உருவாக்கியதும், ராமர் தரிசனம் செய்தார். ராமரே சிவனை பூஜித்ததால் இத்தலம் ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்பட்டது.வறண்ட தீர்த்தம்தமிழகத்தில் பருவ மழை, கோடை மழையின்றி குளம், கண்மாய்கள் வறண்டு போனது. தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு, இக்கோயில் தீர்த்த கிணறுகள் வறண்டன. இதில் கங்கா தீர்த்தம், சூரிய தீர்த்த கிணற்றில் ஒரு அடி உயரத்தில் மட்டும் தீர்த்தம் உள்ளது. இதனால் பக்தருக்கு தீர்த்தம் இறைத்து ஊற்ற தாமதம் ஏற்படுவதுடன், கூட்ட நெரிசலில் பக்தருக்கு புனித நீரை தெளித்து விட வேண்டிய நிலை உள்ளது. கோடை வெயில் தாக்கம் நீடித்தால் பல தீர்த்த கிணறும் வறண்டு போகும் அவலம் உள்ளது.இதனால் விடுமுறை, விழா காலத்தில் குவியும் பக்தர்கள் முழுமையாக நீராட முடியாமல் ஏமாற்றம் அடைவார்கள். மேலும் கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி தீர்த்த கிணற்றில் பக்தர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கேன்கள் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்றி, தீர்த்த கிணற்றை துார் வாரினால் ஓரளவுக்கு தீர்த்த நீர் மட்டம் உயரும்.அழகிய குளம்கோயில் மைய பகுதியில் அமைந்துள்ள சேதுமாதவர் தீர்த்த குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் பை, கேன்களை அகற்றி துார் வாரியதால் தாமரை பூக்கள் மலர்ந்து, ரம்மியாக காட்சியளிக்கிறது. இத்தீர்த்தத்தில் பக்தர்கள் பய பக்தியுடன் நீராடி செல்கின்றனர்.தீர்த்தங்கள் பெயர்1, மகாலெட்சுமி தீர்த்தம் 2, சாவித்திரி தீர்த்தம் 3, காயத்திரி தீர்த்தம் 4, சரஸ்வதி தீர்த்தம் 5, சங்கு தீர்த்தம் 6, சக்கர தீர்த்தம்7, சேதுமாதவர் தீர்த்தம் 8, நள தீர்த்தம் 9, நீல தீர்த்தம் 10,கவய தீர்த்தம் 11, கவாட்ச தீர்த்தம் 12, கந்தமாதன தீர்த்தம் 13, பிரம்மஹத்தி தீர்த்தம் 14, கங்கா தீர்த்தம் 15, யமுனா தீர்த்தம் 16, கயா தீர்த்தம் 17, சர்வ தீர்த்தம் 18, சிவ தீர்த்தம் 19,சாத்தியமிருத தீர்த்தம் 20, சூரிய தீர்த்தம் 21, சந்திர தீர்த்தம் 22, கோடி தீர்த்தம்.கிடப்பில் பிரகார பணிகள்1907-1975ம் ஆண்டில் கோயில் சன்னதியின் முதல் பிரகாரத்தில் இருந்த சுண்ணாம்பு சுவர்களை அகற்றி கருங்கல்லில் பிரகாரம் அமைக்கும் பணி நடந்தது. அச்சமயத்தில் 2ம் பிரகாரத்திலும் பழைய சுவர்களை அகற்றினர். ஆனால் சில காரணங்களால் 2ம் பிரகாரம் கட்டுமான பணி துவங்கவில்லை. பின் 1961-1985 வரை கருங்கல்லில் 2ம் பிரகாரம் கட்டுமானம் துவங்கினாலும், வடக்கு பகுதியில் 200 அடி துாரம் கட்டுமானம் முடிவு பெறாமல், இன்று வரை வானம் பார்த்த பூமியாக கிடப்பில் போடப்பட்டது.
ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய இக்கோயிலில் இந்து அறநிலையத்துறை நிதி, ஆன்மிக நன்கொடையாளர்கள் பலர் இருந்தும் பல ஆண்டுகளாக 2ம் பிரகாரம் கட்டுமானம் நிறைவேறாமல் உள்ளதை கண்டு பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.அம்பானி கைவிரிப்புஆறு மாதங்களுக்கு முன்பு இக்கோயிலில் தரிசனத்திற்கு வந்த பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கோயில் நிர்வாகம் தடபுடலான வரவேற்பு அளித்து சிறப்பு தரிசனம் செய்ய வைத்தனர். பின் முகேஷிடம், கிடப்பில் உள்ள 2ம் பிரகார கட்டுமான பணிகளை முடிக்க நன்கொடை வழங்க கோயில் அதிகாரி வேண்டுகோள் விடுத்தனர்.அப்போது சம்மதித்த முகேஷ், மும்பை சென்றதும் அதற்கான நிதி இல்லை என கைவிரித்து கடிதம் அனுப்பியதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே நன்கொடையாளர்களை எதிர்பாராமல் புகழ்பெற்ற இத்தலத்தில் 2ம் பிரகார பணியை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X