ரேபரலி : லோக்சபா தேர்தலில் பெற்ற படுதோல்வியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் காங்கிரஸ், 2022 ம் ஆண்டு நடக்க உள்ள உ.பி., சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. உபி., சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அக்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி தெரிவிப்பதற்காக ரேபரலி தொகுதிக்கு தாய் சோனியாவுடன் நேற்று சென்ற பிரியங்கா, தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் கண்டித்துள்ளார். பிரியங்காவின் இந்த அதிரடியை அடுத்து அவரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளது.

2022 ல் கட்சிக்கு பிரியங்கா தலைமை ஏற்க வேண்டும் எனவும், அவரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்றும், லோக்சபா தேர்தலை போல் அவரின் வழிகாட்டுதலின்படி 2022 உ.பி., தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் பலதரப்பட்ட கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. கட்சியை பலப்படுத்தவும் பிரியங்காவின் தலைமையே சரியானதாக இருக்கும் எனவும் காங்., முக்கிய தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர்.

உ.பி., இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் பிரியங்கா இப்போதே இறங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தோல்வி குறித்த ஆய்வு கூட்டத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு 40 நிமிடங்கள் முன்னதாகவே பிரியங்கா வந்ததும், கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்புடனும், அதிரடியாகவும் நடந்து கொள்வது ஆகியன கட்சிக்கு அவரே தலைவராக வர வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE