நாட்டிங்காம்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்த உலக கோப்பை லீக் போட்டி, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. 'ரவுண்டு ராபின்' முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று நாட்டிங்காமில் நடக்க இருந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. 'சூப்பர்சானிக்' உதவியால் மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்தன. 3:00 மணி அளவில் மீண்டும் லேசான துாறல் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. வேறு வழியில்லாத நிலையில் 'டாஸ்' கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. தற்போது, 5 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்திலும், 7 புள்ளிகளுடன் நியூசி., முதலிடத்திலும் உள்ளது.
சாதனை தள்ளி போகிறது:
இதுவரை 221 போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, 10,943 ரன்கள் அடித்துள்ளார். வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி ஏற்கனவே பெற்று விட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் 57 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மழை காரணமாக அவரது சாதனை தள்ளி போனது. வரும் 16ம் தேதி, பாக்., உடனான போட்டியில் அவர் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE