புதுடில்லி: 'ரயில்களில், 'மசாஜ்' சேவை வழங்கும் திட்டம், நம்ம கலாசாரத்துக்கு ஒத்து வராது; அதனால், இதை கைவிட வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி., சங்கர் லால்வாணி கடிதம் எழுதியுள்ளார்.

'மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் இருந்து இயக்கப்படும், 39 ரயில்களில், பயணியருக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும்' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு, இந்துார் தொகுதியின், பா.ஜ., - எம்.பி., சங்கர் லால்வாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், லால்வாணி கூறியுள்ளதாவது: ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வகையிலும், பயணியரை ஈர்க்கும் வகையிலும், இந்தூரில் இருந்து இயக்கப்படும், 39 ரயில்களில், மசாஜ் சேவை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பயணியர் முன்னிலையில் மசாஜ் செய்வது, நம் கலாசாரத்துக்கு ஒத்து வராது. பயணியருக்கு மருத்துவ வசதி அளிப்பது, ரயில்களில் டாக்டர்கள் வசதி அளிப்பது ஆகியவை முக்கியமானது. ஆனால், மசாஜ் போன்ற தரமற்ற சேவைகள் தேவையில்லை என்பது, என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த மசாஜ் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE