நடிகை ரோஜாவுக்கு தொழில் வளர்ச்சி கழக வாரிய தலைவர் பதவி | Dinamalar

நடிகை ரோஜாவுக்கு தொழில் வளர்ச்சி கழக வாரிய தலைவர் பதவி

Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (2)
 நடிகை ரோஜாவுக்கு தொழில் வளர்ச்சி கழக வாரிய தலைவர் பதவி

நகரி:ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வான, நடிகை ரோஜாவுக்கு, தொழில் வளர்ச்சி கழக வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த, ரோஜா, 46, சித்துார் மாவட்டம், நகரி தொகுதியில், ஒய்.எஸ்.ஆர்., கட்சி சார்பில் போட்டியிட்டு, இரண்டாவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.

ரோஜாவுக்கு, ஜெகன்மோகன் அமைச்சரவையில் முக்கிய இலாகா வழங்கப்படும் என, தகவல் வெளியானது. கட்சியினரும், ரோஜாவின் ஆதரவாளர்களும், இதை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமைச்சரவையில், ரோஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், ரோஜாவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், ரோஜா, சமீபத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, அவரது இல்லத்தில் சந்தித்து, தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதன் பின், செய்தியாளர் களிடம் பேசிய ரோஜா, 'அமைச்சரவையில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததால், நான் அதிருப்தியில் உள்ளதாக வெளியான தகவல், தவறானது' என்றார். இந்நிலையில், ரோஜாவை, ஆந்திர மாநில தொழில் வளர்ச்சி கழக வாரியத்தின் தலைவராக நியமித்துள்ளதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X