பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தாகமெடுக்குது,தண்ணி இல்லையே,ஜல்லிக்கட்டு,போராட்டம்,கிளர்ச்சி வெடிக்கும்,அபாயம்

சென்னை: தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கடும் வறட்சி காரணமாக, தண்ணீருக்கு மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னையில், அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தாலும், உரிய நேரத்தில், தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது. பல இடங்களில், தண்ணீருக்காக, வெட்டு, குத்து நடக்க துவங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல, தண்ணீருக்காக கிளர்ச்சி வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரம் காட்டாமல், அரசு நிர்வாகம் துாங்குவதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தின், ஆண்டு சராசரி மழை அளவு, 96 செ.மீட்டர். ஆனால், 2018ல், 81 செ.மீ., மழை தான் பெய்தது. தமிழகம் முழுவதும், 2019 ஜனவரி முதல் மே வரை, 10 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 3.4 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட, 69 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. பருவ மழை பொய்த்ததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் அனைத்தும், வறண்டு காணப்படுகின்றன. மாநிலத்தின் தலைநகரான சென்னையில், கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு முன் என்ன செய்தீர்கள்?
போதிய மழை இல்லாததால், இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பது, அரசுக்கு முன்னதாகவே தெரியும். இதன் காரணமாகவே, லோக்சபா தேர்தலின் போது, முதல் கட்டமாக, தமிழகத்தில் தேர்தல் நடத்த, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஜனவரி, 31ல், முதல்வர் தலைமையில், குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது. கோடைக் காலத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்க, சென்னை குடிநீர் வாரியத்திற்கு, 122 கோடி ரூபாய்; நகர மற்றும் கிராமப் பகுதிகளில், குடிநீர் பணிகள் மேற்கொள்ள, தமிழக குடிநீர் வழங்கல் துறைக்கு, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மாவட்டங்களில், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல்; பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை சீர்செய்தல்; துார்ந்துபோன ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல்; தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை, மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுதல் போன்ற பணிகளை, மாவட்ட கலெக்டர்கள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. ஒரு மாதம் முழுக்க, சும்மா இருந்தது அரசு. மார்ச் மாதம், தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதை காரணம் காட்டி, அதிகாரிகள், தண்ணீர் பிரச்னையை தீர்க்க, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விளைவு... தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு, உச்சக்கட்டத்தில் உள்ளது.

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:
சென்னை உட்பட பல மாவட்டங்களில், குடிநீர் மட்டுமின்றி, குளிக்க, இயற்கை உந்துதல்களைச் சமாளிக்கக் கூட, தண்ணீரை விலை கொடுத்து, மக்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதற்குமே, பதிவு செய்து, 25 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை. குடிநீர் சப்ளை நிலையங்கள் முன், பெண்கள் அனைவரும் மல்லுக்கட்டி நின்று, சண்டையிட்டுப் போராடி, நீரைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும், லாரிகள் முன் செல்ல, பெண்கள் அவற்றைப் பின் தொடர்ந்து, கண்காணித்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது; இல்லையெனில், அந்த லாரியை வழிமறித்து, வேறு பகுதி மக்கள், திசை திருப்பி அழைத்துச் சென்று விடுகின்றனர்.

சென்னையில், பெரும்பாலான இடங்களில், ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டு விட்டன. மாநகராட்சி சார்பில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வழங்கப்படுகிறது. ராமாபுரம் பகுதியில், இரு நாட்களுக்கு ஒரு முறை, வீட்டிற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அனகாபுத்துாரில், தண்ணீர் பிரச்னையில், ஒரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதுபோல, ஆங்காங்கே மோதலும், ஜல்லிக்கட்டு போல, தண்ணீருக்கான போராட்டமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், இதில் அவசரம் காட்ட வேண்டிய அரசு நிர்வாகம் துாங்குவதாக, பாதிக்கப்பட்ட பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தண்ணீர் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. தனியார் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் குடிநீர், ஒன்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. குடிநீர் அல்லாத தண்ணீர், 6,000 லிட்டர், 2,500 ரூபாய் என்றும், குடிநீர், ஆயிரம் லிட்டர், 600 ரூபாய் என்றும், விற்பனை செய்கின்றனர்.

அரசியலில் மட்டும் முதல்வருக்கு கவனம்!
பணம் கொடுத்தாலும், தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை; பணத்தை செலுத்தி விட்டு காத்திருக்க வேண்டியுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில், பதிவு செய்தவர்களுக்கு, எந்த கூடுதல் கட்டணமும் இன்றி, தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு பல நாட்களாகிறது. அதேநேரத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளுக்கு, தடையின்றி தண்ணீர் வழங்கப்படுவதால், அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டின் பாதிப்பு தெரியவில்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்க முடியாததால், பலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.

தங்கும் விடுதிகளில் இருப்போரை, காலி செய்யும்படி, நிர்வாகம் கூறியுள்ளது. ஓட்டல்களில், மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களிலும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின், முதல்வர், அனைத்து துறை அதிகாரிகளை, அமைச்சர்களை அழைத்து, ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது. ஆனால், குடிநீருக்காக புதிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதன்பின், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது, உட்கட்சி பூசல் போன்ற பிரச்னைகளில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மூழ்கி விட்டதால், தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு போல போராட்டம் வெடிக்கும்?
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, டில்லிக்கும், கோவைக்கும் பறந்தபடி உள்ளார். முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து, தண்ணீர் எடுத்து வர ஏற்பாடு செய்யவில்லை. இதனால், பல இடங்களில், மக்கள் போராட்டத்தில் குதிக்க துவங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல, குடிநீருக்காக, மக்கள் தெருக்களில் இறங்கி, மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன், அரசு விழித்துக் கொண்டால் நல்லது.

மருத்துவமனைகளிலும் சிக்கல்!

சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம், அரசு மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை. சென்னையில் பிரதானமாக, 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. அவற்றுக்கு, தினமும், ஒரு கோடி லிட்டருக்கு மேல், குடிநீர் தேவை. நிலத்தடி நீர் கிடைக்காததால், குடிநீர் வாரிய நீரை மட்டுமே நம்பி, மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், 60 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே, குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. இதனால், மருத்துவமனை கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர். சில மருத்துவமனைகளில், குழாய்களை தவிர்த்து, 'பேரல்'களில் தண்ணீர் சேமித்து, நோயாளிகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சுகதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் பிரச்னை காரணமாக, மருத்துவமனைகளில், பகுதி நேரங்களாக கணக்கிட்டு, குழாய்களில் தண்ணீர் விடப்படுகிறது. இந்த தண்ணீரை பெறவும், மருத்துவமனை ஊழியர்கள், குடிநீர் வாரிய அலுவலகங்களில், காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.


என்ன செய்கின்றனர் அமைச்சர்கள்:

தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் நேற்று முன்தினம் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். முதல்வரும் பொதுப் பணித் துறை அமைச்சருமான பழனிசாமி நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். ஆறு துறைகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். ஆஸ்திரேலிய துாதருடன் சந்திப்பு மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து பகல் 1:55 மணிக்கு வீடு திரும்பினார். பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானத்தில் திருச்சி சென்றார். மாலை ரத்தினவேலு எம்.பி. குடும்ப திருமண விழாவில் பங்கேற்றார். பின் காரில் ராசிபுரம் சென்றார். அங்கு திருமண வரவேற்பில் பங்கேற்றார். அதன்பின் உத்தமசோழபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இரவு சேலத்திலிருந்து கோவைக்கு காரில் சென்றார். நள்ளிரவு விமானத்தில் சென்னை திரும்பினார். நேற்று தலைமை செயலகம் வரவில்லை. மாலையில் டில்லி சென்றார். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நேற்று முன்தினம் கோவை சென்றார். இது குறித்து அதிகாரிகளை கேட்ட போது 'தினமும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூடி தேவைக்கேற்ப குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய நீராதாரங்களை கண்டறிந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார். இத்துடன் இவர்களின் வேலை 'ஓவர்!' தண்ணீர் பிரச்னை குறித்து அதிகமாக அலட்டிக் கொள்ளவே இல்லை!


குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் நடப்பாண்டு 1829 பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016 - 17ம் ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நீர் நிலைகள் துார் வாரப்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலத்தில் 1519 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்து 2017 - 18ம் ஆண்டு 331.68 கோடி ரூபாயில் 2065 பணிகள் செய்யப்பட்டன. நடப்பாண்டில் 29 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு நடப்பாண்டு 1829 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்நிதியில் சென்னை மண்டலத்தில் 277 பணிகளுக்கு 93 கோடி; திருச்சியில் 543 பணிகளுக்கு 110 கோடி; மதுரையில் 681 பணிகளுக்கு 230 கோடி; கோவை மண்டலத்தில் 328 பணிகளுக்கு 67 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
16-ஜூன்-201908:56:12 IST Report Abuse

Nallavan Nallavanமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை ஜெயா கொண்டு வந்த பொழுது அதனை எள்ளி நகையாடினர் பலர் .......

Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
16-ஜூன்-201908:39:24 IST Report Abuse

Nallavan Nallavanஅந்த முப்பத்தேழும் என்ன பண்ணுதுங்க என்ற கேள்வியை மறைக்க சுடலையின் அடிமைகள் படாத பாடு படுகிறார்கள் ...... ஆகவே இயற்கையின் கொடுமையால் விளைந்த தண்ணீர்ப்பஞ்சத்துக்கு ஆளும் தரப்பை நோக்கிக் கைநீட்டுகிறார்கள்

Rate this:
agni - chennai,இந்தியா
15-ஜூன்-201922:58:32 IST Report Abuse

agni25 வருசத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ,மழை பெறுவோம் அப்படினு சொன்னாங்க,யார் செய்தார்கள்,நம்ம மக்கள் தொகை காடுகள் மரங்களை அழிச்சு போர்வெல்கள்,பெரிய வீடுகள்,சாலைகளை தான் வளர்த்துள்ளனர்.நம்ம ஒவ்வொரு செகண்டும் பிராண மூச்சு எடுக்கிறோம் யாரு குடுக்கிறாங்க இந்த காற்றை மரங்கள்தானே.உயிர் சுவாசிக்க காற்று வேணும்,குடிக்க தண்ணி வேணும் ஆனா வீட்டில ஒரு மரம் வைக்க மனம் இல்லை, கொஞ்சோம் இடம் இருந்தாலும் இருந்தாலும் கட்டடம் கட்டி வருமானம் பார்க்கணும்,வீட்டுக்கு வெளியே ஒரு மரம் வளர்க்க கூட எண்ணம் இல்லை இப்படி இருந்தா இந்த நிலை தான் வரும்.இந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும் போது கூட அரசையும் பிறரையும் குறை கூறுகிறோமே தவிர நம் பொறுப்பாக யோசிப்பதில்லை. இயற்கையும்,பூஞ்ச பூதங்கள் இவற்றின் இயல்பு எப்போதும் இயற்கையையாக தான் இருக்கு,ஆனா மனுசங்க தான் நம்ம இயற்கையோட ஒரு படைப்பு அப்பிடிக்கறதையே மறந்துவிட்டு இயற்கையை அழித்து செயற்கையா வாழ்கிறோம்.அதுக்கான பலன் தான் இது .இப்போ கூடஇன்னும் அணை கட்டணும்,கடல் நீரை கொண்டு வரணும் தற்காலிகமா சிந்திக்காம மக்கள்தொகையை குறைத்து மரங்களையும்,வனங்களை பெருக்கி இயற்கையை சில ஆண்டுகளாவது பொறுப்புடன் பராமரித்தால் நம் வருங்கால குழந்தைகளுக்காவது இந்த குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் நிரந்தரமாக தீர்க்கலாம்.நம்மாழ்வார் சொல்வார் உயர்ந்த மரங்கள் அதிகம் இருக்கும் குளிர்ச்சியான இடத்தில் தான் மேகக்கூடங்கள் இறங்கி மழை வரும் மரங்கள் மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும்,புவி வெப்பமாவதை தவிர்க்கும்.இதை யார் சொன்னாலும் நாம் தற்காலிக தீர்வை தேடி பின் பிரச்னையை மறந்து விடுகிறோம்.இனியெல்லாம் பெருக்கி வரும் இத்தனை மக்களுக்கு குடிநீர் குடிப்பது பெரிய பிரச்சனையாக தான் இருக்கும் நிரந்தர தீர்வு நம் ஒவ்வொருவரின் கைகளில் மட்டும் தான் உள்ளது.

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X