பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி சேனலில் 'திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில்'- வரலாற்று சுவடுகளை வெளிக்கொணர திட்டம்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 கல்வி சேனலில் 'திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில்'- வரலாற்று சுவடுகளை வெளிக்கொணர திட்டம்

திருப்பூர்:அரசு விரைவில் துவங்கவுள்ள புதிய கல்வி சேனலில் திருப்பூரின் சுக்ரீஸ்வரர் கோவில் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம்பெறவுள்ளன.தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனலுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குழந்தைகளுக்கான பயனுள்ள நிகழ்ச்சிகளை அளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இதில் பாடத்திட்டத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட நிகழ்ச்சிகள் ஏற்கனவே தயாராகி உள்ள நிலையில், தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலில் உள்ள தலைப்புகள் மண்டலம் வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மண்டலத்திற்கு குறளின் குரல், நலமே வளம், மணியோசை, சுவடுகள், ஓடிவிளையாடு பாப்பா, முத்தமிழ் முனையம், ஒழுக்கம் விழுப்பம் தரும், சந்திப்புகள் ஆகிய தலைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில், 'சுவடுகள்' எனும் தலைப்பில், ஊத்துக்குளி ரோடு பெரியபாளையம் பகுதியில் உள்ள பாண்டிய மன்னர்கள் மற்றும் சோழர்களால் கட்டப்பட்ட சுக்ரீஸ்வரர் கோவில் இடம்பெற உள்ளதாக திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்கசுடரொளி தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:கி.பி., 12ம் நுாற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டதாக நம்பப்படும் இக்கோவில், 'பாதுகாக்கப்படும் சின்னமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டு சிற்ப கோவில்களில் முக்கியமானது. உத்தராயணமும், தட்சிணாயணமும் சந்திக்கும் வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுவது, கட்டடக்கலையின் சிறப்பு.
இதுகுறித்து விபரம் நாளைய தலைமுறைகளுக்கு நிச்சயம் சேர வேண்டும்.பள்ளி மாணவர்களை இவ்விடத்திற்கு அழைத்து சென்று, தொல்லியல் ஆராய்ச்சி ஒருவர் ஒவ்வொரு சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதாக நிகழ்ச்சி தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னையிலிருந்து தயாரிப்பு குழு வந்ததும் ஓரிரு வாரத்தில் படப்பிடிப்பு துவங்குவோம். இதுபோன்று, 'மணியோசை' என்ற தலைப்பில் தினம் ஒரு பள்ளி எனும் கருவில் காலை - மாலை வரை ஒரு பள்ளியின் செயல்பாடு, சிறப்பு தன்மையை வெளிச்சம் போட்டு காட்ட உள்ளோம்.'குறளின் குரல்' தலைப்பில் ஒவ்வொரு குறளுக்குமான அர்த்தங்களை பாடல், ஓவியம், நாடகம் என வித்தியாசமான பாணியில் விளக்க உள்ளோம். 'நலமே வளம்' எனும் தலைப்பில் டாக்டர் ஒருவர் குழந்தைகளிடம் உடல் மற்றும் மன நலம், ஆரோக்கியம் சார்ந்து உரையாடுவது போலவும், ஆலோசனைகள், அறிவுரைகள் அளிப்பது போலவும் பதிவு செய்யப்படும்.'ஓடிவிளையாடு பாப்பா' விளையாட்டு துறையில் மாநில, தேசிய அளவில் சிறந்த விளங்கும் தனிபர், குழுக்களை அடையாளப்படுத்தும் முயற்சியாகும்.
'முத்தமிழ் முனையம்' இயல், இசை, நாடகம் எனும் துறைகளில் மாணவர்களின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துகிறோம். பள்ளிகளில், வெளி சமூகத்தில் தன்னுடைய சுய ஒழுக்கம், நெறிமுறைகளை கடைபிடிக்கும் சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் பகுதி, 'ஒழுக்கம் விழுப்பம் தரும்'.திருப்பூரில் பல்வேறு துறைகளில் தங்கள் உழைப்பால் உயர்ந்த மாமனிதர்களை மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடுவது போல, 'சந்திப்புகள்' பகுதி அமைய உள்ளது. இதற்கான பல்வேறு ஆயத்த பணிகள் நடத்து வருகின்றன. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இதுகுறித்து தகவல்களை அனுப்பியுள்ளோம். மொத்தத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்கான நல்ல தளமாக இந்த சேனல் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X