பொது செய்தி

தமிழ்நாடு

'பசுமை போர்வை' உருவாக்க ரூ.2 கோடி: கண்துடைப்புக்கு நடந்த மரம் வளர்ப்பு பணி

Added : ஜூன் 15, 2019
Advertisement

அவிநாசி:அவிநாசி ஊராட்சி பகுதியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மரக்கன்று நடும் பணிக்கு, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும், பெயரளவில் பணி நடந்துள்ளது.மாநிலத்தில், வறட்சி மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க, அதிகளவில் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம், நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த, 2015 - 2018 காலகட்டத்தில், 'பெரியளவில் பசுமை போர்வை உருவாக்கும் திட்டம்' என்ற பெயரில், கிராம ஊராட்சிகளில் மரக்கன்று நட்டு வளர்க்க, அரசு கணிசமான தொகையை ஒதுக்கியது.அதன்படி, மாவட்ட வாரியாக கிராம ஊராட்சி பகுதிகளில், மரக்கன்று நட்டு வளர்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வரிசையில், அவிநாசி தாலுகாவில் உள்ள, 31 கிராம ஊராட்சிகளில், மரக்கன்று நட்டு வளர்க்க, 2.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்து 300 மரக்கன்று நட்டு, வளர்த்து, பராமரிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.'ஊராட்சிப்பகுதிகளில், ஒவ்வொரு குட்டையை சுற்றியும், 100, 200 மரக்கன்று நடப்பட்டுள்ளது' என, எழுத்துப் பூர்வமாக, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் கணக்கு காண்பிக்கும் வகையில் மட்டுமே, மரக்கன்று நடப்பட்டுள்ளன. நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வயதான பெண்கள் தான், பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.அவர்கள் மரக்கன்று நட, சரியான அளவில் குழி வெட்டுவது இல்லை; பல இடங்களில், நடப்பட்ட மரக்கன்றுகள் கூட, பட்டுப்போய் உள்ளன. சில இடங்களில், அவற்றை ஆடு, உட்பட கால்நடைகள் தின்று நாசமாக்கிவிட்டன.
ஏதோ, சொற்ப அளவிலான கிராமங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.'பசுமை போர்வை' திட்டத்தில், திருப்பூர் மாவட்டம் முழுக்க, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 935 மரக்கன்று நட அரசாணை வெளியிடப்பட்டது. இப்பணிகள் குறித்து, அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி, திட்டம் எதிர்பார்த்த பலன் அளித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X