வெயில் தாக்கத்தால் பீட்ரூட் சாகுபடி காலம் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெயில் தாக்கத்தால் பீட்ரூட் சாகுபடி காலம் அதிகரிப்பு

Added : ஜூன் 15, 2019

உடுமலை:வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், பீட்ரூட் சாகுபடி காலமும் அதிகரித்தது. அறுவடையின் போது விலையில்லாததால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கரிசல் மண் பூமிகளில், அதிகளவு பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. குளிர் பிரதேச காய்கறியாக இருந்தாலும், உடுமலை பகுதிகளிலும் வளர்கிறது.
இதனால், மழைக்காலங்கள் மற்றும் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த நிலையில், தற்போது ஆண்டு முழுவதும் பீட்ரூட் நடவு செய்து வருகின்றனர்.65 நாட்களில், மகசூல் கொடுக்கும் பீட்ரூட், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. கோடை மழை ஏமாற்றிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், பெரும்பாலான பகுதியில், பீட்ரூட் செடிகள் காய்ந்தும், காய் பிடிக்காமலும் ஏமாற்றியது.காய் சிறியதாக இருந்ததால், பல இடங்களில் தோண்டாமல் வயல்களில் விடப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் இருந்த பகுதியில் நடவு செய்யப்பட்ட பீட்ரூட் சாகுபடி காலம் அதிகரித்து, 85 முதல் 90 நாட்களாகியுள்ளது.
வழக்கமாக, ஏக்கருக்கு 30 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில், வெயில் காரணமாக, தற்போது, 20 டன் மட்டுமே கிடைத்து வருகிறது. விலையும் குறைவாக உள்ளதால், பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: கடுமையான வெயில் காரணமாக, செடிகள் பாதித்து, காய் பிடிப்பது குறைந்தது. 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் செடிகள், தற்போது, 90 நாட்களுக்கு பிறகு, பறிக்கப்படுகிறது; சாகுபடி செலவு அதிகரித்துள்ளது.ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. கிலோ, 16 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலையான விலை கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X