அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிலும் வேண்டும் ஒற்றைத் தலைமை!

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 எதிலும் வேண்டும் ஒற்றைத் தலைமை!

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க., என்ற இரும்புக் கோட்டையை, திறமையாக நிர்வகிக்க, வலுவான, ஒற்றைத் தலைமை இல்லை. இதனால், அந்த கோட்டை, ஆட்டம் காணும் அளவுக்கு உள்ளது.
'திறமையான ஒற்றைத் தலைமை தேவை' என, அக்கட்சியில் சமீபத்தில் எழுந்த குரல், நியாயமானதாகவே தோன்றுகிறது.கடந்த இரண்டரை ஆண்டு கால, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அரசின் செயல்பாடுகளை பார்த்த பிறகு தான், அக்கட்சியில், இவ்வாறு குரல் எழுந்துள்ளது.எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, அ.தி.மு.க., கோட்டையை, திறம்பட கட்டிக் காப்பாற்றியவர், ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை காட்டிலும், அதிக பலத்துடனும், அதிக திறமையுடனும், கட்சியை நிர்வகித்து வந்தார்.அவர் தலைமையின் கீழ், மாவட்டச் செயலர்கள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கட்சிப் பணியாற்றி வந்தனர். அதற்குப் பலனாக, சாதாரண தொண்டனையும், மாவட்டச் செயலர், அமைச்சர் போன்ற பதவிகளில் அமர்த்தி, ஆச்சரியப்பட வைத்தார், ஜெ.,யாருக்கு, எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார், ஜெயலலிதா. கட்சி நிர்வாகிகள் மனதில் என்ன உள்ளது என்பதை, உணரக்கூடிய வல்லமை பெற்றிருந்தார்.'எம்.ஜி.ஆருடன் இணைந்து, சினிமாவில் நடித்த தகுதி ஒன்றே, அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பேற்க போதும்' என, ஜெ., நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால், என்றைக்கோ அவர், காணாமல் போயிருப்பார்; கட்சியும் மறைந்திருக்கும்.தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான கருணாநிதியை, நேருக்கு நேர் எதிர்த்துப் போராடும் வல்லமை, ஜெ.,வைத் தவிர, வேறு யாருக்கும் வந்திருக்காது. சோதனைகள், அவமானங்கள், தோல்விகள் பல வந்தாலும், அனைத்தையும் தாங்கி, கட்சியை வழி நடத்தியவர்.அவர் உயிருடன் இருந்தவரை, கட்சியில் பெரிய அளவில் அதிருப்தி குரல் எழுந்ததில்லை. ஆனால், அவர் மறைந்து, இரண்டரை ஆண்டுகளுக்குள், அ.தி.மு.க., ஆட்டம் காண்கிறது!
அ.தி.மு.க., மட்டுமின்றி, இந்தியாவில் எந்தக் கட்சியும், ஒற்றைத் தலைமை இன்றி, வெற்றி பெற முடியாது; வெற்றி பெற்றதில்லை. திறமையான ஒற்றைத் தலைமை இல்லையேல், கட்சி ஆட்டம் கண்டு விடும்.ஜெ., இருந்த போதே, அ.தி.மு.க.,வை விழுங்க காத்திருந்த, தி.மு.க.,வினர் - ஜெ., இல்லாதஇந்த நேரத்தில், அவரின் கட்சியை அழிக்க, நேரம் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 37 இடங்களில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அ.தி.மு.க.,வில் வலுவான தலைமை இல்லாததே காரணம்; அதற்கு, ஜெ., தான் முக்கிய காரணம்.எம்.ஜி.ஆர்., எப்படி, ஜெ.,வை அடையாளம் காட்டிச் சென்றாரோ, அது போல, தனக்குப் பின், கட்சியை வழி நடத்திச் செல்ல, யாரையும், ஜெ., அடையாளம் காட்டிச் செல்லவில்லை.ஒரு வேளை, யாரையாவது அவர் மனதில் வைத்திருக்கலாம்; அதை தெரிவிப்பதற்குள், திடீரென அவர் இறந்து விட்டார். அரசியலிலும், ஆட்சியிலும் மட்டுமின்றி, வாழ்விலும் யாரும் நிரந்தரமில்லை என்பதை, ஜெ., உணராமல் போனது தான் துரதிர்ஷ்டம்!
இது போன்ற நிலைமை, தி.மு.க.,வில் ஏற்படாதவாறு, உயிருடன் இருக்கும் போதே, ஸ்டாலினை முன்னிறுத்தி விட்டார் கருணாநிதி. ஸ்டாலினும், கருணாநிதியை போல, தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்; தந்தையைப் போல, கடுமையாக உழைக்கிறார்.கருணாநிதியின் அரசியல் திறமை, பக்குவம், பாதி அளவு கூட, ஸ்டாலினிடம் இல்லையென்றாலும், கட்சியில் விரிசல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதுவே பெரிய சாதனை!தி.மு.க.,வில், ஸ்டாலின் தலைமைக்கு, எதிர்ப்பு இல்லை. ஆரம்பத்தில், அழகிரியால் உருவான எதிர்ப்பு அலை, வெகு சீக்கிரம் அடங்கிப் போயிற்று. இப்போது ஸ்டாலினை எதிர்க்க, அக்கட்சியில் ஆட்களே இல்லை.இதற்கு காரணம், கருணாநிதியின் புத்திசாலித்தனம். இளைஞரணி தலைவர், சென்னை மேயர், துணை முதல்வர் என, பதவிகளை வழங்கி, ஸ்டாலினுக்கு என,ஓர் உயர்ந்த இடத்தை, கட்சியினர் மத்தியில் உருவாக்கி வைத்து விட்டார். இதை, ஜெயலலிதா செய்யவில்லை.இந்திய அரசியல் கட்சிகளில், இதுவரைக்கும், எந்த கட்சியிலும், இரட்டைத் தலைமை இருந்ததில்லை. இரட்டைத் தலைமை இருந்த கட்சிகளும், வெற்றி பெற்றதில்லை. கட்சியில் எல்லாரும் தலைவர்கள் என கூறும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சிக்கு, ஒற்றைத் தலைமை இல்லாதது தான் முக்கிய காரணம்.இது போல, பல உதாரணங்களை, இந்திய அரசியலில் கூறலாம்.
மத்தியில், நேரு, இந்திரா, ராஜிவுக்குப் பின், காங்கிரஸ் கட்சியை வழி நடத்திச் செல்ல, ஒற்றைத் தலைமையாக மாறிய, ராகுல் மீது, கட்சியினருக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான், அவர் தலைமை ஏற்ற பிறகு, காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது.அது போல, தமிழக காங்கிரசுக்கும், ஒற்றைத் தலைமை இல்லாதது தான், பிரச்னைக்கு காரணம். காமராஜருக்குப் பின், பலமான, ஒற்றைத் தலைமை இல்லாமல் போனதால், தமிழகத்தில், காங்கிரஸ் சிதறுண்டு கிடக்கிறது. ஆளாளுக்கு கோஷ்டி சேர்த்து, 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என்கின்றனர்; ஆனால், முடியவில்லை!தமிழக காங்கிரசில், ஒற்றைத் தலைமை வற்றிப் போய், நீண்ட காலம் ஆயிற்று. அனைவரையும் அரவணைத்து, காங்கிரசை ஒருங்கிணைத்து, ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வர, யாரும் முயற்சிப்பதில்லை.தமிழக காங்கிரசில், பெயருக்குத் தான் தலைவர் ஒருவர் இருப்பார். ஆனால், அவருக்கு எதிராக, பல தலைவர்கள்; அவர்கள் தலைமையில் பல கோஷ்டிகள்; ஆளுக்கொரு கொள்கை; நாளுக்கொரு கருத்து...எல்லாருமே தலைவர் ஆக வேண்டும்; எல்லாருமே ஆட்சியில் அமர வேண்டும் என நினைப்பது தான், காங்கிரஸ் கட்சியை, அதள பாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. ஒரே தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வரும், ஆற்றல் மிக்கத் தலைவர்கள், காங்கிரசில் இல்லை. இனிமேலும் வருவரா என்பதும் சந்தேகமே!அதனால் தான், மாநில கட்சிகளின், முதுகில் சவாரி செய்து, காலத்தை ஓட்டுகிறது.
அதுபோல, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், வலுவான ஒற்றைத் தலைமை கிடையாது. காங்கிரஸ் போல தான், தமிழக, பா.ஜ.,வும் உள்ளது. பெயரவுக்குத் தான், தமிழிசை தலைவர். அவரும், ஆற்றல் மிக்கத் தலைவர் இல்லை.தமிழிசை ஒரு கருத்தைச் சொன்னால், எச்.ராஜா வேறொன்று சொல்வார்; பொன். ராதாகிருஷ்ணன், மற்றொன்று சொல்வார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளைச் சொல்லி, மக்களை குழப்புவர்.பா.ஜ.,வில் நிலவும் முரண்பாடுகளால் தான், தமிழகத்தில் மட்டும், 'தாமரை' மலர்வதில்லை. படுதோல்விக்குப் பிறகும், பாடம் கற்காமல், தமிழக, பா.ஜ.,வினர், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால், தமிழகத்தில் எப்போதும் காலுான்ற முடியாது.திறமை மிக்க புதிய தலைமை, தமிழக, பா.ஜ.,வுக்கு இப்போது அவசியமும், அவசரமும் கூட. மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்வதை விட்டு, தனித்து நின்று, துணிவுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். வெற்றிக்கான வியூகத்தை வகுக்கக்கூடிய, வலுவான ஒற்றைத் தலைமை இருந்தால் தான், தமிழகத்தில், பா.ஜ., தலை எடுக்கும்.
உலக வரலாற்றை பார்த்தால், திறமையான, ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்ட அணிகளும், குழுக்களும், கட்சிகளுமே, வெற்றிக் கொடியை நாட்டியுள்ளன.கம்யூனிச புரட்சியாளர், லெனின், கியூபா நாட்டின் முன்னாள் தலைவர், பிடல் காஸ்ட்ரோ, தென் ஆப்ரிக்க கருப்பின மக்கள் தலைவர், நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் போன்ற பல புரட்சியாளர்கள், தனித்துவம் மிக்க, தலைமைப் பண்பு கொண்டிருந்ததால், மிகப் பெரிய வெற்றியை பெற முடிந்தது.சுதந்திரத்துக்கு முன், மஹாத்மா காந்தி என்ற, வலுவான ஒற்றைத் தலைமையின் கீழ், நாடே கட்டுண்டு இருந்தது. சுதந்திரத்துக்குப் பின் நேருவுக்கும், மற்ற தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி கட்டுப்பட்டிருந்தது.எனவே, வலுவான ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்ட புரட்சிகளும், போராட்டங்களுமே, வெற்றி பெற்றுள்ளன என்பதை, சரித்திரம் கூறுகிறது.
பல தலைமையின் கீழ் செயல்பட்ட ஆட்சியும், போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு காரணம், பிரதமர் பதவிக்கு, அக்கட்சியுடன் கூட்டணி வைத்த பல தலைவர்கள் ஆசைப்பட்டது தான். அதனால் தான், மக்கள் அவர்களை நிராகரித்தனர். ஒற்றைத் தலைமையின் கீழ், திறமையுடன் செயல்படும், பா.ஜ., வுக்கே மக்கள், ஆதரவு கரம் நீட்டினர்.எனவே, ஒற்றைத் தலைமையே, அரசியலில் மகத்தான வெற்றியைக் கொடுக்கும்; இரட்டைத் தலைமையால், குழப்பமே நீடிக்கும். யார் பேச்சை கேட்பது என, கட்சியினரே குழம்பிப் போய் விடுவர். இரட்டைத் தலைமையால் துணிவான, தெளிவான முடிவுகள் எடுக்க முடியாது.நாட்டு மக்களும், இரட்டைத் தலைமையை விரும்புவதில்லை.
எனவே, அ.தி.மு.க., சிதறிப் போகாமல் இருக்க வேண்டுமானால், ஜெ., போன்று, திறமையான, ஒற்றைத் தலைமையின் கீழ், கட்சி வர வேண்டும். அப்போது தான், இரட்டை இலை, தமிழகத்தில் மீண்டும் துளிர்க்க வாய்ப்பு உண்டு.தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை; தானாக உருவாகின்றனர் என்பதால், ஒற்றைத் தலைமை உருவாகும் வரை, அ.தி.மு.க., காத்திருக்கத் தான் வேண்டும். அதுவரை, அந்தக் கட்சியை, தி.மு.க., மற்றும் பிற கட்சிகள், கபளீகரம் செய்யாமல் இருக்க வேண்டும்!தொடர்புக்கு:vbnarayanan60@gmail.comவ.ப.நாராயணன்அரசியல் ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜூன்-201907:50:43 IST Report Abuse
Bhaskaran மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அதிமுகவில் யார் இருக்கின்றனர் நிர்வாக திறமை உள்ளவர்கள் செங்கோட்டையனும் பாண்டியராஜனும் மட்டுமே மற்றவர்கள் தத்திகள் ஊழல் பெருச்சாளிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X