வெடித்தது தண்ணீர் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெடித்தது தண்ணீர் போராட்டம்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (19)
Share
தண்ணீர், போராட்டம்

தமிழகம் முழுவதும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்க, அரசு அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, மாநிலம் முழுவதும் மக்கள், காலி குடங்களுடன், ஆர்ப்பாட்டம் மற்றும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, போர்க்கால அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, பருவமழை பொய்த்ததால், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆறு, ஏரி, குளம் என, நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மக்கள் குடிநீருக்கு திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news

மதிய உணவுஇதை முன்னதாகவே அறிந்த அரசு, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக, சென்னையில், இதுவரை இல்லாத அளவிற்கு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தும், தண்ணீர் கிடைக்காததால், மக்கள் வீடுகளை காலி செய்து, புறநகர் பகுதிகளில் குடியேற துவங்கி உள்ளனர்.தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த, ஐ.டி., நிறுவனங்கள், தமது ஊழியர்களை, அலுவலகம் வராமல், வீட்டில் இருந்தபடியே
பணி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றன. ஓட்டல்களில், மதிய உணவு நிறுத்தப்பட்டு வருகிறது.குடிநீர் வாரியத்தில், குடிநீருக்காக பதிவு செய்தவர்கள், நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். தனியார் வாகனங்களை நம்பியிருப்போரும், பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும்,குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, குடிநீர் திட்டப் பணிகளை, அதிகாரிகள் சரிவர மேற்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பிறகும், அமைச்சர்கள், அதிகாரிகளும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பல மாதங்களாக, தண்ணீர் வராததால், ஏமாற்றமடைந்த மக்கள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, உள்ளாட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் கண்டுகொள்ளாததால், ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் மற்றும், சாலை மறியல் போராட்டங்களில், ஈடுபட துவங்கி உள்ளனர்.


latest tamil news
இரு நாட்களாக, சென்னை, விருதுநகர், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில், மக்கள், காலி குடங்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை, மாதவரத்தில், தனியார் நிறுவனங்கள், திருட்டுத்தனமாக நிலத்தடி நீர் எடுப்பதை கண்டித்து, நேற்று மறியல் போராட்டம் நடந்தது. கரூர் மாவட்டத்தில், நேற்று வெள்ளக்காரன்பட்டி, குறவப்பட்டி, காக்காவாடி போன்ற கிராமங்களிலும்; வேலுார் மாவட்டம், ஒழுகூர்; ஈரோடு மாவட்டம், ஒட்டப்பாறை; கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம், விழுப்புரம் ராகவன்பேட்டை, கள்ளக்குறிச்சியில் சேலம் சாலை என, பல்வேறு இடங்களில், குடிநீர் கேட்டு, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால், அப்பகுதிகளில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள், குடிநீர் வழங்க, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னரே, போராட்டத்தை கைவிட்டனர்.
இதே நிலை நீடித்தால், மாநிலம் முழுவதும், போராட்டங்கள் அதிகரிக்கும்; சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உருவாகும். இதை தவிர்க்க, அரசு போர்க்கால அடிப்படையில், மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news


மதுபான ஆலைகள்தண்ணீர் எடுக்க தடை?


'தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, மதுபான ஆலைகள் மற்றும் தனியார் குளிர்பான நிறுவனங்கள், தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சங்க தலைவி, கலைச்செல்வியின் அறிக்கை:தமிழகம் முழுவதும், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில், மதுபான தயாரிப்பு ஆலைகள் மற்றும் தனியார் குளிர்பான நிறுவனங்களில், நிலத்தடி நீரை உறிஞ்சி பணம் சம்பாதிக்கின்றனர்.மக்களின் துயர் துடைக்க, இந்நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். மக்கள் பலன் பெற, போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு, இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X