கரூர்: 'ரத்த தானம் செய்பவர்களே உண்மையான ஹீரோக்கள்' என, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலா தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், அதிக அளவு ரத்தம் தானமாக வழங்கியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில், டீன் ரோஸி வெண்ணிலா பேசியதாவது: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில், 43 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 4,320 பேரிடம் ரத்தம் தானமாக பெற்றுள்ளோம். அதன் மூலம், பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, விபத்தில் சிக்கியோருக்கு ஏற்படும் ரத்த இழப்பு ஈடுசெய்யப்பட்டு, ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. இதற்கு ரத்த தானம் வழங்கியவர்கள்தான் காரணம். சினிமாவில் வருவோர் உண்மையான ஹீரோக்கள் அல்ல. ரத்தத்தை தாமாக முன் வந்து வழங்கி, பல உயிர்களை காப்பாற்றுபவர்களே உண்மையான ஹீரோக்கள். நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தும்போது, மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டில், ரத்த வங்கியின் துரித செயல்பாட்டால், சிக்கலான நிலையில் சேலம், மதுரை, திருச்சி போன்ற பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நோயாளிகளைக்கூட காப்பாற்றி இருக்கிறோம். இவ்வாறு அவர், பேசினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கித் தலைவர் சுகந்தி, அலுவலர் தமிழழகன், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் ஜாகீர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE