'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னேதாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தைஅன்பின் பின்னேதகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை...'-கவிஞர் நா.முத்துகுமாரின் இந்த வரிகளுக்கு உயிரூட்டி வருகிறார் நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபன்.
தனது பூஜையறையில் தெய்வமாக நினைத்து தந்தை ராதாகிருஷ்ணன் படத்தை மட்டும் வைத்து வழிபட்டு வருகிறார். ''பொதுவாக எல்லோரும் இன்ஷியலாக அப்பாவின் பெயரை வைத்திருப்பார்கள். அதன் முக்கியத்துவத்தை ஒருவன் தந்தையாகும்போதுதான் உணருவான்.
எனக்கு சின்ன வயசிலேயே அப்பா என்றால் ரொம்ப இஷ்டம். அவர் தபால் துறையில் கிளார்க்காக இருந்தார். அப்போது குடும்பத்தில் வறுமை. ஆனால் அதையெல்லாம் வெளிகாட்டாமல், அவமானங்களை தாங்கிக்கொண்டு எங்களை வளர்த்தார்.
அப்பாவை கண்டால் மரியாதை கலந்த பயம் எனக்கு இருந்தது. இன்று என் எழுத்துகள் நல்லா இருப்பதற்கு காரணம் அவர்தான். பேச்சுத்திறமையும் அவரிடத்தில்தான் கற்றுக்கொண்டது. சரியாக எழுதவில்லையென்றாலோ, பேசவில்லையென்றாலோ தலையில் ஒரு அடி அன்பாக அடித்து திருத்துவார். இன்று சரியான நேரத்திற்கு ஓரிடத்திற்கு செல்கிறேன் என்றால், அது தந்தையிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதுதான். அவர் அதில் முன்னுதாரணமாக இருந்தவர். அவருக்கு முன்னால் நான் பெயர் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு முன்னாடியே போய் சேர்ந்துவிட்டார்.
காலையில் நான் எழுந்ததும் உச்சரிக்கிற முதல் பெயரும் அப்பாவுடையதுதான். பூஜை அறை மட்டுமல்ல, எல்லா அறைகளிலும் அவரது போட்டோ இருக்கும். அப்பா எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பார்கள். ஆனால் எனக்கு அவர் வழிகாட்டி மட்டுமல்ல, தெய்வம்.
'காட் பாதராக' இருந்த அப்பா, அவர் மறைவுக்கு பிறகு 'காட்' ஆக மாறிவிட்டார். எனக்கு தெரிந்தவர்களின் அப்பா இறந்துவிட்டால் 'கவலைப்படாதீர்கள். உங்களுக்கு மேலே ஒரு பெர்சனல் 'காட்' உள்ளார். அவரை வழிபட்டாலே எல்லாம் சரியாக போயிடும்' என்பேன்.
நான் நடித்த தாவணி கனவுகள் படம் பார்த்தார். அதில் நான், அவர் பணியாற்றிய தபால்துறை ஊழியராக நடித்திருப்பேன். அப்போது அவர் உடல்நலம் பாதித்திருந்ததால் அந்த கேரக்டரை விரும்பி கேட்டு நடித்தேன். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக நான் சேர்ந்ததும் அப்பாவுக்கு நம்பிக்கை வந்தது. அதற்கு பிறகு எனது புதிய பாதை படத்தையோ பார்க்கவோ, என் மேடை பேச்சை கேட்கவோ அவர் இல்லை. எனது மகனுக்கு அப்பா பெயரை வைத்துள்ளேன்.
அப்பாவுக்கு நான் தந்த மரியாதையை இன்று என் மகனுக்கு தந்து கொண்டிருக்கிறேன், அந்த பெயருக்காக. எங்கப்பா ஒரு பக்கா ஜென்டில்மேன். கடைசி காலத்தில் கேன்சரால் சிரமப்பட்டார். அதைக்கூட எங்களிடம் சொல்லவில்லை. அந்தளவுக்கு ஒரு ஹீரோயிசம் உள்ள ஆளு. ரியல் ஹீரோ அவர்'' என நெகிழ்ச்சி அடைந்தார் ரா.பார்த்திபன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE