நாட்டு பழங்களின் நன்மை குறித்து கூறும், சித்த மருத்துவர், கு. சிவராமன்: பக்கத்து கிராமங்களில் இருந்து, பழங்கள் வணிகப்படுத்தப்படும் போது, அடுத்த இரண்டு நாட்களில், நம் கைகளுக்கு வந்துவிடும்; அதில், ரசாயன பூச்சுகள் இருக்காது. இவ்வாறு கிடைக்கும் பழங்களை சாப்பிடும்போது, அருகிலிருக்கும் விவசாயிகளும் பயன்பெறுவர்; விவசாயமும் காப்பாற்றப்படும். நம் நாட்டுப் பழங்களை நாமே ஒதுக்கினால், அவை அழிவை நோக்கித்தானே செல்லும்.எந்த மண்ணில், தட்பவெப்ப நிலையில் வாழ்கிறோமோ, அந்தப் பகுதியில் விளையும் பழங்களை உண்பதே சரியானது. வியாபார உத்திகளின் விளைவு, சாதாரண - மனிதனின் மனதுக்குள், ஐரோப்பியப் பழங்கள் நன்மை கொடுப்பதாகப் பதிய வைக்கப்படுகிறது. நம்மூர் கொய்யாப் பழங்களை ஏளனமாக நினைக்க வைக்கின்றன, இன்றைய விளம்பரங்கள்.
பொதுவாக, வெளிநாட்டுப் பழங்கள், 2,000 கி.மீ., கடந்து வரும்போது, கெட்டுப் போகாமல் இருக்க, செயற்கைப் பூச்சுகள் பூசப்படுகின்றன. உதாரணமாக, முன்பு, கொடைக்கானல் ஆப்பிள், காஷ்மீர் ஆப்பிள் என, இந்திய சந்தைக்கு வந்து கொண்டிருந்தன.இன்று வாஷிங்டன், சீனா போன்ற பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை நம் கையில் கிடைக்க, பல நாள், மாதங்கள் ஆகலாம். ஒவ்வொன்றும், ஒவ்வொரு தட்பவெப்ப நிலையைச் சேர்ந்தது.சேமிக்கும் போது, 1 டிகிரி தட்பவெப்ப நிலையில் சேமிக்கப்படும் பழம், நம் கைக்கு வரும் போது, 30 டிகிரியில் இருக்கும். உடனடியாக வெப்ப நிலை மாறும் போது, பழத்தின் இயல்பான தன்மை மாறி, சத்துகள் குறையும்.இன்று எளிதாகக் கிடைக்கும் வாழைப் பழங்களை, சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், மனிதனின் சிறந்த காலை உணவு, வாழைப்பழம் தான். சர்க்கரை, இதய நோய் இருப்பவர்கள் தவிர, அனைவரும் வாழைப்பழத்தை உண்ணலாம்.இன்றைய இளம் தலைமுறைக்கு, பல உள் நாட்டுப் பழங்களின் சுவை கூடத் தெரியாமல் இருப்பது, வருந்த வேண்டிய விஷயம்.'ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி' மற்றும் வெளிநாட்டு ஆரஞ்சு என, இறக்குமதியாகும் பழங்களை விரும்பி வாங்கும் பலரும், மிகவும் எளிதாக கிடைக்கும் இலந்தைப்பழம், பனம்பழம், வில்வம்பழம் போன்றவற்றின் சுவைகளை அறியாமலிருப்பது, வேதனையாக இருக்கிறது.
இரண்டு கிவி பழங்களில் கிடைக்க வேண்டிய வைட்டமின், 'சி' சத்து, ஒரு பெரிய நெல்லிக்கனியில் கிடைத்து விடும். ஆஸ்திரேலியா ஆப்பிள் அல்லது வாஷிங்டன் ஆப்பிள் பழத்தில் கிடைக்கும் சத்தைவிட, நம் நாட்டில் விளையும் வாழைப்பழத்தில், ஊட்டச்சத்துகள் அதிகம்.சுவைக்காக என்றாவது ஒருநாள், வெளிநாட்டு பழங்களை சாப்பிடுவதில் தவறில்லை. மற்றபடி, நாம் வாழும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பழங்களை உண்பதுதான், நம் உடலுக்கு நன்மையை தரும்.