மும்பை:சிறந்த அரசியல்வாதி ஆவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தலைமைப் பண்பு, பொது விவகாரம் மற்றும் நிர்வாகத் திறமையை மேம்படுத்திக் கொள்ளும் படிப்புக்கு, பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. இங்குள்ள, தானே மாவட்டத்தில் உள்ள, ஐ.ஐ.டி.எல்., எனப்படும், இந்திய ஜனநாயக தலைமைப் பண்பு மையத்தில், முதுகலை பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது.இந்த கல்வி நிறுவனத்தை, பா.ஜ.,வின் துணைத் தலைவர், வினய் சகஸ்ரபூதே, நடத்தி வருகிறார்.இது, ஓராண்டு முதுகலை பட்டயப் படிப்பு. இதுவரை, 51 பேர், முடித்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வகுப்பு துவங்குகிறது. இதில், 25 பேர் சேர்க்கப்படுவர். ஆனால், 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.''சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்கும் வகையில், கற்றுத் தரப்படுகிறது. படித்த உடன் அவர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம்,'' என, சகஸ்ரபூதே கூறினார்.அரசியலைத் தவிர, பொது விவகாரங்கள், அரசு சாரா அமைப்பு என, பல துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.